Published : 08 Dec 2020 03:52 PM
Last Updated : 08 Dec 2020 03:52 PM

நெற்பயிரில் பரவும் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல்: கட்டுப்படுத்த முடியாமல் மதுரை விவசாயிகள் கலக்கம்

மதுரை

மதுரை மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் அதிகரித்துள்ளததால் விவசாயிகள், இந்த ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் கலக்கம் அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழையால் தென் மாவட்டங்களில் விவசாயம் செழிந்துள்ளது. வைகை அணையிலிருந்து பெரியார் பாசனக்கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மதுரை விவசாயிகள் நெற்பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது இந்த நெற்பயிர்கள் செழித்து வளர்ந்துள்ள நிலையில் அதில் ஆனைக்கொம்பன் என்ற ஒரு வகை ஈ தாக்குதல் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் இந்த ஈக்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியாமல் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தின் வேளாண் விஞ்ஞானிகள் பா.உஷாராணி மற்றும் செல்வி ரமேஷ் கூறியதாவது:

ஆனைக்கொம்பன் ஈக்கள் கொசுவைப்போல் சிறியவைகளாகவும், நீண்ட மெல்லிய கால்களையும் கொண்டுள்ளது. பெண் பூச்சிகள் மஞ்சள் கலந்த சிவப்பு நிறமாகவும், தடித்த வயிற்றுப்பாகத்தைக் கொண்டும் இருக்கும். ஆண் பூச்சிகள் மெல்லியவைகளாகவும் கரும் சிவப்பு நிறத்திலும் காணப்படும்.

ஈக்கள் இரவு வேளைகளில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை. பெண் பூச்சி முட்டைகளை தளிர் இலைகளின் அடிப்பரப்பிலோ 3-4 முட்டைகளான குவியல்களாகவோ அல்லது தனித்தனியாகவோ இடும்.

ஒரு பூச்சி 100-300 முட்டைகள் வரை இடக்கூடும். முட்டைகளிலிருந்து 2-3 நாட்களில் சுமார் 1.0 மி.மீ., நீளமுள்ள புழுக்கள் வெளிவரும். அவை இலை உறை வழியாக தண்டின் அடிப்பாகத்தை அடைந்து தண்டைத் துளைத்து உட்சென்று குருத்தைத் தாக்கி அழித்தவிடுகிறது.

இதனால், புது இலைகளுக்கு பதிலாக யானைக்கொம்பு போன்ற நீண்ட குழாய் தோன்றும்.

இந்த பூச்சி தாக்குதலினால் உண்டாகும் அறிகுறிகள் வெள்ளிக்குருத்து அல்லது வெங்காயக் குருத்து என்றும் குறிப்பிடப்படுகிறது. இப்பூச்சியின் புழுக்கள் தண்டைத் துளைத்து உட்சென்று குருத்தைத் தாக்கும்போது உட்குருத்தின் இயல்பான வளர்ச்சி தடைப்பட்டு உட்குருத்திலிருந்து தோன்றும் இலை உறை, புழு தோற்றுவிக்கும் சில நொதிப்பொருட்களால் ஊக்குவிக்கப்பட்டு நீண்ட, குழாய் போன்ற பாகமாக வளரும். குழாய்கள் யானையின் கொம்பபைப் போன்ற அமைப்பை கொண்டிருப்பதால் இந்த அறிகுறி ஆனைக்கொம்பு என்று அழைக்கப்படுகிறது.

புழுக்கள் நாற்றங்காலிலுள்ள நாற்றுக்களை தாக்கக்கூடியவைகளாக இருந்தாலும் 5-6 வாரம் வரை வயதுள்ள இளம் செடிகளை அதிகம் தாகக்கக்கூடியவை.

தாக்கப்பட்ட செடிகளிலிருந்து கதிர்கள் தோன்றுவதில்லை. அதிகம் தாக்கப்பட்ட பயிரில் மகசூல் இழப்பு 50 சதவீதம் வரையில் இருக்கும். இந்த ஈக்களை கட்டுப்படுத்த கருப்பு சுழலியான பிளாட்டி கேஸ்டர் ஒரைசா என்ற புழு ஒட்டுண்ணியானது இயற்கையிலே ஆனைக்கொம்பன் ஈயின் புழுக்களை கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த ஒட்டுண்ணி கொண்ட தூர்களை சேகரித்து பத்து சதுர மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் வயலில் பரப்பிவிட வேண்டும். அறுவடை செய்தபின் நிலத்தை உடனடியாக உழ வேண்டும்.

வயலில் புல் வகை களைச்செடிகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தழைச்சத்து உரங்களை பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும். புற ஊதாவிளக்கு பொறி ஒரு எக்டருக்கு ஒன்று என்ற அளவில் வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். கார்போசல்பான், குளோரோர்பைரிபாஸ், பைப்ரோனில், தயாமீத்தாக்சாம் உள்ளிட்ட ஒரு பூச்சிக்கொல்லியை தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x