Last Updated : 08 Dec, 2020 03:19 PM

 

Published : 08 Dec 2020 03:19 PM
Last Updated : 08 Dec 2020 03:19 PM

புதுச்சேரியில் நிலவும் பிரச்சினைகளை உணர்ந்து ஆளுநர் செயல்பட வேண்டும்: அமைச்சர் எம்.கந்தசாமி வலியுறுத்தல்

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எம்.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோர்.

காரைக்கால்

புதுச்சேரியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை உணர்ந்து அவற்றுக்குத் தீர்வு காண துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முன்வர வேண்டும் என, கூட்டுறவு மற்றும் நலத்துறை அமைச்சர் எம்.கந்தசாமி வலியுறுத்தியுள்ளார்.

காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை, கான்ஃபெட், கூட்டுறவு ரேஷன் கடை, கூட்டுறவு பால் வழங்கும் சங்கம் உள்ளிட்ட அரசு சார் நிறுவனங்களில் நிலவும் பிரச்சினை, ஊழியர்கள் நடத்திவரும் போராட்டங்கள் தொடர்பாக அமைச்சர் எம்.கந்தசாமி தலைமையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (டிச.7) இரவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, அரசு செயலாளர் அசோக்குமார், கூட்டுறவு பதிவாளர் முகமது மன்சூர் ஆகியோர் பங்கேற்றனர். ஒவ்வொரு நிறுவன ஊழியர் சங்கத்தினரும் தனித்தனியாகக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் எம்.கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரி அரசு, ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை என்றோ, ரேஷன் கடைகளைத் திறக்க முடியாது என்றோ சொல்லவில்லை. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டாலும், ரேஷன் கடைகள் திறக்கப்படாததால் அதனைச் செயல்படுத்த முடியவில்லை.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கைகளால்தான் ரேஷன் கடைகளைத் திறக்க முடியவில்லை என்பதை உரிய விளக்கங்களுடன் ஊழியர்களிடம் எடுத்துக் கூறும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைத்தான் நாங்கள் கேள்வி கேட்க முடியும் என்று கூறுகின்றனர். அது நியாயம்தான். இதனைத் துணைநிலை ஆளுநர் உணர வேண்டும். முதல்வர், அமைச்சர்களால் அனுப்பப்பட்ட கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, கரோனா பாதிப்பு போன்ற தொடர்ச்சியாகப் பல்வேறு பாதிப்புகளால் சிறிய மாநிலமான புதுச்சேரியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. நிதி ஒதுக்கீடும் குறைந்துள்ளது. முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஆட்சிக் காலத்தில் கடைசி 2 ஆண்டுகள் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை, அதிக அளவிலான ஆட்கள் நியமிக்கப்பட்டதால் லாபம் இல்லாமல் பல்வேறு அரசு சார் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதுபோன்ற காரணங்களால் தற்போது நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனினும், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தியுள்ளது. 9,500 காலிப் பணியிடங்களை நிரப்ப தொடர்ந்து ஆளுநர் தடுத்துக்கொண்டே இருக்கிறார். ஆட்சியாளர்களும் போராடிக் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க முடியாத நிலை இருக்கிறது.

இதற்கெல்லாம் யார் காரணம் என்பதை மக்கள் கவனித்துக் கொண்டு இருக்கின்றனர். இதனை உணர்ந்து தேர்தல் வருவதற்குள் நிலுவையில் உள்ள பிரச்சினைகள் எல்லாவற்றையும் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். எல்லோரும் போராடத் தயாராக உள்ளனர். தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவது புதுச்சேரி மக்களுக்கு நல்லதல்ல.

மின்துறையைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து புதுச்சேரி சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடனும் தீர்மானம் நிறைவேற்றியும் கூட, துணைநிலை ஆளுநர் தனியார் மயமாக்கப் பரிந்துரை செய்துள்ளார். இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்கள், பொதுமக்களைப் பாதிக்காத வகையில் ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஊழியர்கள், தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் தீர்வு காணும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன".

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x