Published : 08 Dec 2020 03:13 PM
Last Updated : 08 Dec 2020 03:13 PM

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கோவில்பட்டியில் ரயில் மறியல்: திமுக, தோழமை கட்சிகளைச் சேர்ந்த 131 பேர் கைது

புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து கடம்பூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பொன்னுச்சாமி உள்பட எதிர்க்கட்சியினர் 3 பெண்கள் உள்பட 49 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கோவில்பட்டி 

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கோவில்பட்டியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் தோழமை கட்சிகளைச் சேர்ந்த 131 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கிளர்ந்தெழுந்த பஞ்சாப், ஹரியாணா, உ.பி. உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் திரண்டு முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

13-வது நாளாக இன்றும் கடுங்குளிரில் போராட்டம் தொடர்கிறது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், கலையுலகினர் எனப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய போராட்டம் உலக கவனத்தை ஈர்த்து வருகிறது.

மத்திய அரசின் 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி டிச.8-ம்தேதி விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்புக்கு திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும் முழு ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்திருந்தன.

அதன்படி, இன்று கோவில்பட்டியில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. காலை 10.45 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு வந்த சென்னை - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு ரயிலை மறித்து, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

இதில், திமுக நகரச்செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், மார்க்சிஸ்ட் நகர செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பரமராஜ், காங்கிரஸ் நகர தலைவர் சண்முகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் முத்து, மதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், துணை செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன், நகர செயலாளர் பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 131 பேரை டி.எஸ்.பி. கலைக்கதிரவன், காவல் ஆய்வாளர்கள் அய்யப்பன், சுதேசன், ரயில்வே காவல் ஆய்வாளர் சூரத்குமார் மற்றும் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x