Published : 08 Dec 2020 01:45 PM
Last Updated : 08 Dec 2020 01:45 PM

மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து தாய், மகள் உயிரிழப்பு; இருவரையும் இழந்து வாடும் மகளை அரசு காக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை

உயிர்ப்பலி வாங்கும் சென்னை - மதுரவாயல் பைபாஸ் மழைநீர் வடிகால் கால்வாய்களை மூடும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், விபத்தில் தாயையும், சகோதரியையும் பறிகொடுத்த இவாஞ்சலினுக்கு முழுமையாக உதவிட முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

“சென்னையில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து தாய் கரோலினா - அவரது அன்பு மகள் இவாலின் ஆகிய இருவரும் உயிரிழந்த கொடூரமான நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னையில் பெய்த கனமழையின் போது இரும்புலியூர் மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருந்த இந்த மழைநீர் வடிகால் கால்வாய் அந்தத் தாய்க்கும் மகளுக்கும் மரணக் குழியாக மாறியிருப்பதற்கு மத்திய மாநில அரசுகளின் அலட்சியமே காரணமாகும்.

திறந்தவெளி மழைநீர் வடிகால் கால்வாய்களை மூடி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட 2018-ம் ஆண்டிலேயே போடப்பட்ட திட்டத்திற்குத் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையரகம் அனுமதி அளிக்கவில்லை. மத்திய அரசிடம் அதிமுக அரசும் வலியுறுத்தி இத்திட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரு அரசுகளின் தோல்வியினால், ஏற்கனவே தந்தையை இழந்து துயரத்தில் இருந்த குடும்பத்தில் தாயும் மகளும் அரசின் அலட்சியத்திற்குப் பலியாகியுள்ளார்கள்.

தாயையும், சகோதரியையும் இழந்துள்ள இவாஞ்சலினுக்கு பெயரளவுக்கு நிதியுதவி மற்றும் இழப்பீடு வழங்குவதற்குப் பதிலாக- அவரை முழுமையாகக் காப்பாற்றிட அதிமுக அரசு போதிய நிதியுதவி செய்ய முன்வர வேண்டுமென்றும், அந்தப் பைபாஸ் சாலையில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களை மூடும் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தினை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x