Published : 08 Dec 2020 12:13 PM
Last Updated : 08 Dec 2020 12:13 PM
தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86. அவருடைய மறைவுக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகிய இருவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா உடல்நலக் குறைவால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (டிச. 08) சிகிச்சை பலனின்றி காலமானார்.
எஸ்.ஆர்.ராதா, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். இவர் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அவருடைய மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கூட்டாக வெளியிட்ட இரங்கல் செய்தி:
"அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா அதிமுகவுக்குத் தலைமைப் பொறுப்பேற்றவுடன், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றிய எஸ்.ஆர்.ராதா, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அடைந்தோம்.
எம்ஜிஆர், ஜெயலலிதா மீது மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த ஆரம்பக்கால கழக உடன்பிறப்பு எஸ்.ஆர்.ராதாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்".
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT