Last Updated : 04 Oct, 2015 10:19 AM

 

Published : 04 Oct 2015 10:19 AM
Last Updated : 04 Oct 2015 10:19 AM

உத்திரமேரூரில் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கும் அவலம்: பேரூராட்சி மீது பொதுமக்கள் புகார்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திர மேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு செய்யாற்றில் 7, வேடபாளையம் ஏரியில் 4 என, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட 10 ஆழ்துளை கிணறு களின் மூலம், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், செய்யாற்றில் அமைந்துள்ள 7 ஆழ்துளை கிணற்றில் இரண்டில் நீர் சுரப்பு இல்லை என 2012-ம் ஆண்டு கைவிடப்பட்டது. மேலும், கடந்த 10 மாதங்களாக மீதமுள்ள 5 ஆழ்துளை கிணற்றிலும் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைத்து வருகிறது. பேரூராட்சியில் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை உள்ளது. ஆனால், வேடபாளையம் ஏரியில் உள்ள 4 ஆழ்துளை கிணற்றில் இருந்து கிடைக்கும் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை மட்டுமே, பேரூராட்சி நிர்வாகம் விநியோகித்து வருகிறது. இதனால், பேரூராட்சியில் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி குடிநீர் தேவைக்கான கட்டமைப்பு வசதி களை, மேம்படுத்தாதே குடிநீர் தட்டுப் பாட்டுக்குக் காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, உத்திரமேரூர் மக்கள் கூறியதாவது: பேரூராட்சியின் குடிநீர் தேவையை கருத்தில்கொண்டு, செய்யாற்றில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படவில்லை. மேலும், மற்றொரு குடிநீர் ஆதரமாக உள்ள வேடபாளையம் ஏரியும் மழை இல்லாததால் வறண்டு காணப் படுகிறது. இதனால், குடிநீரை விலை கொடுத்த வாங்க வேண்டிய நிலை உள்ளது. பாலாறுபோல், செய்யாறு வறண்டு விடவில்லை. மாறாக சிறிய மழைபெய்தாலும் செய்யாற்றில் தண்ணீர் செல்வதை காணலாம். பேரூராட்சியின் குடிநீர் தட்டுபாட்டுக்கு, குடிநீருக்கான கட்டமைப்பு வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் முறையாக மேற்கொள்ளாததே காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, உத்திரமேரூர் பேரூ ராட்சி செயல் அலுவலர் கமல்ராஜ் கூறியதாவது: செய்யாற்றில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் சுரப்பு இல்லை என்பது உண்மை. ஆனால், ஏரியில் உள்ள ஆழ்துளை கிணறுக ளில் கிடைக்கும் 9 லட்சம் லிட்டர் தண்ணீரைக் கொண்டு, 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகித்து வருகிறோம். மேலும், சிறு மின்விசை பம்புகள் மூலம் தண்ணீரை பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், குடிநீர் தேவைக்காக 10 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில், செய்யாற்றில் புதிய ஆழ் துளை கிணறு மற்றும் வேடபாளையம் ஏரியில் புதிய திறந்தவெளி கிணறு அமைக்க ரூ.2.4 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி, விரைவில் பணிகளைத் தொடங்க உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x