Published : 08 Dec 2020 03:15 AM
Last Updated : 08 Dec 2020 03:15 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் வெள்ளப் பெருக்கு; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிப்பு: வெளியேற்றக்கோரி 2 இடங்களில் மறியல், சாலைகள் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு

கோவில்பட்டி பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் அத்தை கொண்டான் கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீர் இளையரசனேந்தல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

தூத்துக்குடி/கோவில்பட்டி/ திருநெல்வேலி/ நாகர்கோவில்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த மழையால் தூத்துக்குடி நகரின் பல பகுதிகளில் வீடுகளுக் குள் தண்ணீர் புகுந்தது. குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

புரெவி புயல் தாக்கத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 4 மணி வரை நீடித்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது.

பாலம் மூழ்கியது

கோரம்பள்ளம் குளம் ஏற்கெனவே நிரம்பியதால் உப்பாற்று ஓடையில் வந்த 1,000 கன அடி தண்ணீர்நேற்று காலையில் 7 மதகுகள் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது. மாலையில் நீர் வரத்து குறைந்ததால் 4 மதகுகள் அடைக்கப்பட்டன. இதனால் கோரம்பள்ளம் மறுகால்ஓடையில் தண்ணீர் கரைபுரண்டதால் முத்தையாபுரம் கிருஷ்ணா நகர், ஜே.எஸ்.நகர் போன்ற பகுதிகளில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது.

முத்தையாபுரம்- அத்திமரப்பட்டி சாலை மற்றும் அத்திமரப்பட்டி- காலாங்கரை தாம்போதி பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் சென்றது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி வைகுண்டம் அணையை தண்டி 3,700 கன அடி தண்ணீர் கடலுக்கு சென்றது. குடியிருப்பு பகுதிகள், மானாவாரி பயிர்களை மழைநீர் சூழ்ந்தது.

தூத்துக்குடி நகர் முழுவதும்வெள்ளக்காடாக காட்சியளித்தது. வெற்றிவேல்புரம், லூர்தம்மாள்புரம், சாமுவேல்புரம், எஸ்.எஸ்.மாணிக்கபுரம், கால்டுவெல் காலனி பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனை வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு, அண்ணாநகர் அரசு அலுவலர் குடியிருப்பு, பிரையண்ட்நகர், சிதம்பரநகர், டூவிபுரம், கதிர்வேல்நகர், ராஜீவ்நகர், பாரதிநகர், பூபாலராயர்புரம், போல்டன்புரம், டி.எம்.எஸ் நகர், சின்னகண்ணு புரம், தேவர் காலனி,குறிஞ்சி நகர், தனசேகரன் நகர், போல்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி, பாத்திமாநகர், கேடிசி நகர்உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ள தெருக்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன் தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பாதிப்பை பார்வையிட்டார். பாத்திமாநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 200 பேர்நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புதுக்கிராமம், பக்கிள்புரம் பகுதியில் உள்ள முகமதுபரூக் என்பவரின் வீடு இடிந்து விழுந்ததில் பொருட்கள் சேதமடைந்தன.

சாலை மறியல்

தூத்துக்குடி தாளமுத்துநகர், அன்னை தெரசா காலனியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தக் கோரி சமூக ஆர்வலர் செல்வக்குமார் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரையண்ட் நகர் பிரதான சாலையில் 1-வது தெருவில், பைக்குகளை நிறுத்தி பொதுமக்கள் மறியல் செய்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திமழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் கண்மாய் நிரம்பிமறுகால் பாய்ந்தது. ஆனால், மறுகால் ஓடையில் அடைப்பு இருந்ததால், தண்ணீர் மூப்பன் பட்டி கண்மாய்க்கு செல்லாமல், இளையரசனேந்தல் சாலையில்சுமார் 2 அடி உயரத்துக்கு பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன.

தகவல் அறிந்ததும் வட்டாட்சியர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் அங்கு வந்துஓடை அடைப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.

கயத்தாறு

கயத்தாறு பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பெய்த மழையால் மின்தடை ஏற்பட்டது. பிரியங்கா நகரில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்தது.தெற்குசுப்பிரமணியபுரத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் விடிய விடிய உறங்காமல் அங்குள்ள மக்கள் குடம் மற்றும் வாளியில் தண்ணீரை பிடித்து வெளியே ஊற்றினர். வடக்கு மயிலோடை ரோட்டில் மழைநீர் ஆறாக ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தெருக்களில் வெள்ளம் புகுந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளிவிளையாட்டு மைதானத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. விளாத்திகுளம், புதூர் பகுதியில் மானாவாரி பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.

மணியாச்சியில் 160 மி.மீ. மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): விளாத்திகுளம் 67. காடல்குடி 29, வைப்பார் 121, சூரன்குடி 40, கோவில்பட்டி 41, கயத்தாறு 91, கடம்பூர் 108, ஓட்டப்பிடாரம் 53, வேடநத்தம் 20, கீழ அரசடி 29, எட்டயபுரம் 39, சாத்தான்குளம் 1, வைகுண்டம் 4, தூத்துக்குடி 54.8 மி.மீ. அதிகபட்சமாக மணியாச்சியில் 160 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிக்கு அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 67.40 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 45, சேர்வலாறு- 32, மணிமுத்தாறு- 5, அம்பாசமுத்திரம்- 22, சேரன்மகாதேவி- 36.40, நாங்குநேரி- 1.50, திருநெல்வேலி- 38.

பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 123.80 அடியாக இருந்தது. நேற்று 2 அடி உயர்ந்து 125.40 அடியாக இருந்தது. அணைக்கு 1,584.82 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து தண்ணீர் திறப்பது நேற்று நிறுத்தப்பட்டு அணை மூடப்பட்டது.

சேர்வலாறு நீர்மட்டம் 136.81 அடியிலிருந்து 138.78 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 97.50 அடியிலிருந்து 98.35 அடியாகவும் உயர்ந்திருந்தது. வடக்குபச்சையாறு நீர்மட்டம் 22 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 10.62 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 35 அடியாகவும் இருந்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில்நேற்று முன்தினம் இரவு பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. நேற்றும் மிதமான மழைபெய்தது. நேற்று காலை 8 மணிவரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆய்க்குடியில் 62.40 மி.மி. மழை பதிவானது.

அடவிநயினார் அணையில் 58 மி.மீ., தென்காசியில் 42.60, சங்கரன்கோவிலில் 41, கருப்பாநதி அணையில் 31, செங்கோட்டையில் 26 , சிவகிரியில் 16, ராமநதி அணை,குண்டாறு அணையில் தலா 15, கடனாநதி அணையில் 8 மி.மீ. மழைபதிவானது. கடனா நதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 81.60 அடியாக இருந்தது. ராமநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 75.50 அடியாக இருந்தது. கருப்பாநதி அணை, குண்டாறு அணை ஆகியவை ஏற்கெனவே நிரம்பிவிட்டதால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.

அடவிநயினார் அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து94 அடியாக இருந்தது. தொடர் மழைகாரணமாக குற்றாலம் அருவிகளில் நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது.

திற்பரப்பு அருவியில் வெள்ளம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து மேகமூட்டத்துடன் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மலையோர பகுதிகளில் கனமழை பெய்தது. பாலமோரில் 64 மிமீ, மாம்பழத்துறையாறில் 41, அடையாமடையில் 59, ஆனைகிடங்கில் 37, சிற்றாறு ஒன்றில் 87, பூதப்பாண்டியில் 25, பேச்சிப்பாறை 33, சிவலோகம் என்ற சிற்றாறு இரண்டில் 73 மிமீ மழை பெய்தது.

பாலமோரில் பெய்த கனமழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.60 அடியாக உள்ள நிலையில், 818 கனஅடி தண்ணீர் வரத்தாகிறது. அணையில் இருந்து 468 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியாக உள்ள நிலையில் 197 கனஅடி தண்ணர் வரத்தாகிறது. 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து வெளியற்றப்படும் தண்ணீரால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x