Published : 07 Dec 2020 08:08 PM
Last Updated : 07 Dec 2020 08:08 PM
திருச்சி அரைவட்டச் சுற்றுச்சாலைப் பணிகள் குறித்த தகவல்களைத் தர அலுவலர்கள் மறுப்பதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள், சமூக நல அமைப்பினர் இன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் கரூர் புறவழிச் சாலையில் உள்ள திண்டுக்கரை முதல் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவாக்குடி வரை 42.91 கி.மீ. தொலைவுக்கு அரைவட்டச் சுற்றுச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில், திருச்சி புறவழிச் சாலை 67க்குட்பட்ட பஞ்சப்பூர்- துவாக்குடி வரையிலான பகுதி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் காரைக்குடி அலகிலும், பஞ்சப்பூர் முதல் திண்டுக்கரை வரையிலான பகுதி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கரூர் அலகிலும் வருகின்றன.
இதனிடையே, அரைவட்டச் சுற்றுச்சாலைப் பணிக்காக ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் மண்ணைக் கொட்டி மூடி, அழிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏரிக்குள் மண்ணைக் கொட்டிச் சாலைகள் அமைக்க நிரந்தரத் தடை விதித்ததுடன், வேறு வழியில்லை எனில் உயர்நிலைப் பாலமாகவோ அல்லது சாலையை ஏரிக்கு வெளியே செல்லும் வகையிலோ அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
ஆனால், நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் அலுவலர்கள் தொடர்ந்து அரைவட்டச் சுற்றுச்சாலையை அமைத்து வருவதாகக் கூறி தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப.சின்னத்துரை அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அவருடன், பல்வேறு அமைப்புகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக, செப்.30-ம் தேதி பறந்தான்குளம் அருகே போராட்டம் நடத்தியதைடுத்து, திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் அக்.5-ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், ம.ப.சின்னதுரை கூறும் புகார் தொடர்பாக நேரில் கள ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அக்.7-ம் தேதி திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் விசுவநாதன் தலைமையில் திருவெறும்பூர் வட்டாட்சியர் ஞானமிர்தம் மற்றும் நெடுஞ்சாலை, வருவாய், வேளாண் துறையினர் அடங்கிய குழுவினர் அரைவட்டச் சுற்றுச்சாலை செல்லும் பாதையில் வரும் 13 ஏரிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, சுற்றுச்சாலையின் இருபுறமும் பல ஏரிகளில் மண் கொட்டப்பட்டிருப்பதையும், சில இடங்களில் ஏரிகள் ஆக்கிரமிப்பில் இருப்பதையும், சில இடங்களில் திட்டத்தின்படி இல்லாமல் பணியில் குறைகள் இருப்பதையும் கண்டறிந்த கோட்டாட்சியர் விசுவநாதன், ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், கொட்டப்பட்டுள்ள மண்ணையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுத்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், ம.ப.சின்னத்துரை மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த செழியன், மகஇக ஜீவா, சமூக நீதிப் பேரவை மாவட்டச் செயலாளர் ரவிக்குமார், ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.சம்சுதீன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து ம.ப.சின்னத்துரை கூறும்போது, "திண்டுக்கரை முதல் துவாக்குடி வரையிலான அரைவட்டச் சுற்றுச்சாலைப் பணிகளில் ஏரி, குளங்கள் மண்ணைக் கொட்டி அழிக்கப்படுவது குறித்துக் கூறிய புகாரின் பேரில் வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் அக்.7-ம் தேதி நேரில் கள ஆய்வு செய்தனர். ஆனால், அதுகுறித்த ஆய்வு அறிக்கையை இதுவரை சமர்ப்பிக்கவில்லை.
ஆய்வு அறிக்கை கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியும் நெடுஞ்சாலை, சுற்றுச்சூழல், பொதுப்பணி, மாவட்ட நிர்வாகம், வருவாய்க் கோட்டாட்சியர், வேளாண்துறை என எவரும் தகவல் தரவில்லை. எனவே, அலுவலர்களைக் கண்டித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஒரு வாரத்துக்குள் ஆய்வு அறிக்கையைத் தருவதாக அலுவலர்கள் கூறியுள்ளனர். ஒருவேளை ஆய்வு அறிக்கையைத் தரவில்லையெனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே சாகும் வரை போராட்டம் நடத்தப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT