Published : 07 Dec 2020 06:54 PM
Last Updated : 07 Dec 2020 06:54 PM
புதுச்சேரியில் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் உட்படப் பல பகுதிகளில் மறியலும் நடைபெற உள்ளது.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்க அமைப்புகள், சமூகநல அமைப்பினர், விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் நாளை நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, மதிமுக மற்றும் அனைத்துத் தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல் மக்கள் நீதி மய்யம், ஆம்ஆத்மி, எஸ்யூசிஐ கம்யூனிஸ்ட் ஆகிய கட்சி நிர்வாகிகள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் புதுவையில் நாளை காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்குகிறது. தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டெம்போ, ஆட்டோ ஆகியவை இயங்காது. தனியார் வர்த்தக நிறுவனங்கள், பெரிய மார்க்கெட் வியாபாரிகள், வணிகர் சங்கங்கள் இவையனைத்தும் மூடப்படுகின்றன.
பந்த் போராட்டத்தையொட்டி ராஜாதியேட்டர் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், பாகூர், வில்லியனூர், திருக்கனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டமும் நடக்கிறது. இதனையடுத்து போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
கட்சி முடிவுக்குக் கட்டுப்படுவதாக முதல்வர் கருத்து
முதல்வர் நாராயணசாமி பந்த் போராட்டம் தொடர்பாகக் கூறுகையில், "பந்த் போராட்டத்துக்குப் புதுச்சேரி காங்கிரஸ் ஆதரவு தந்துள்ளது. காங்கிரஸ் தொண்டர் என்ற முறையில் நாங்கள் கட்டுப்படுகிறோம். இது விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை. விவசாயிகள் வஞ்சிக்கப்படும்போது அனைவரும் ஒத்துழைப்பு தருகிறார்கள்.
மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT