Last Updated : 07 Dec, 2020 05:10 PM

5  

Published : 07 Dec 2020 05:10 PM
Last Updated : 07 Dec 2020 05:10 PM

தனியார் நிறுவனத்திடம் வாடகைக்கு விடப்பட்ட நீலகிரி மலை ரயில்: மேட்டுப்பாளையம்- உதகை பயணத்துக்கு ரூ.3 ஆயிரம் கட்டணம் வசூல்

கோவையைச் சேர்ந்த தனியார் ஓட்டல் நிறுவனம் வாடகைக்கு எடுத்து இயக்கிய நீலகிரி மலை ரயில்.

கோவை

தனியார் நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்பட்ட நீலகிரி மலை ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்ல, சுற்றுலாப் பயணிகளிடம் ரூ.3 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலில் பயணிக்க உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். கரோனா பாதிப்பு காரணமாக 8 மாதங்களாக இந்தச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேட்டுப்பாளைம்- உதகை இடையே கடந்த 5-ம் தேதி காரமடையைச் சேர்ந்த தனியார் ஓட்டல் நிறுவனம், தங்கள் நிறுவன ஸ்டிக்கரை ஒட்டி மலை ரயிலை இயக்கியது. இதில் பயணிக்க ஒருமுறை பயணக் கட்டணமாக ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த ரயிலை இயக்கத் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாகப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

''காரமடையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு தினம் உள்ளிட்ட 13 நாட்களுக்கு மலை ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த நிறுவனத்திடமிருந்து வைப்புத்தொகை, வாடகைக் கட்டணம் பெறப்பட்டுள்ளது. வெறும் ரயிலை மட்டுமே ரயில்வே அளிக்கிறது. அதில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் டீ, காபி, ஸ்நாக்ஸ் போன்றவற்றை வாடகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனமே அளிக்கிறது.

அதற்கேற்ப கட்டணத்தை நிர்ணயித்து தனியார் நிறுவனம் பயணிகளை அழைத்துச் சென்றுள்ளது. ரயில்வேவுக்கும், பயணக் கட்டணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதற்கு முன்பும் இதேபோன்று பிறந்த தாள் கொண்டாட்டம், திருமண நிகழ்ச்சி போன்றவற்றுக்குச் செல்ல நாள் வாடகைக்கு ரயில்கள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒன்றும் புதிய நடைமுறை கிடையாது. ரயில்வேயின் வருவாயைப் பெருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பயணத்தின்போது தனியார் நிறுவனம் நியமித்த பணிப்பெண்கள்.

இதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு ஐரோப்பாவைச் சேர்ந்த தம்பதியினர் ரூ.3 லட்சம் செலுத்தி தாங்கள் இருவர் மட்டும் பயணிக்க மலை ரயிலை வாடகைக்கு எடுத்தனர். 2019 டிசம்பரில் 71 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டும் இதேபோல வாடகைக்கு ரயில் இயக்கப்பட்டது.

எப்போது வழக்கம்போல் ரயில் இயங்கும்?

ரயில்வே வாரியம் அனுமதி அளித்த பிறகு, பழைய கட்டணத்துடன் வழக்கம்போல மீண்டும் மலை ரயில் இயக்கப்படும். மேட்டுப்பாளைம்- உதகை இடையே ரயிலை இயக்க தனியார் நிறுவனத்திடமிருந்து ஒருநாள் வாடகையாக ரூ.4.93 லட்சம் பெறப்பட்டுள்ளது. மொத்தப் பயண தூரம், இடைப்பட்ட நிறுத்தங்கள், பயண நேரம் ஆகியவற்றுக்கு ஏற்ப வாடகைக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறினால் தனியார் நிறுவன வைப்புத் தொகையில் இருந்து அதற்காக கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

யார் வாடகைக்கு எடுக்கிறார்களோ அவர்கள் தங்கள் பெயரை ரயிலில் விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ரயிலின் பெட்டிக்கோ, அதன் மீதான பெயிண்ட்டுக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் வாடகைக்கு எடுப்பவர்களிடமிருந்து அதற்குத் தனியே கட்டணம் பிடித்தம் செய்யப்படும். எப்படி ரயிலை ஒப்படைத்தோமோ அப்படியே ரயிலைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும். ரயில் தூய்மையாக இல்லாவிட்டால் அதற்கும் கட்டணம் செலுத்த நேரிடும்''.

இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x