Published : 07 Dec 2020 04:09 PM
Last Updated : 07 Dec 2020 04:09 PM
கொடைக்கானலில் கரோனா ஊரடங்கு முதல் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளுக்கான படகு சவாரி இன்று முதல் தொடங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர வடிவ ஏரியில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக படகுசவாரி இயக்கப்பட்டு வருகிறது.
கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. பின்னர், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களான பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், ரோஸ் கார்டன் ஆகியவற்றிக்கு செல்ல முதற்கட்டமாக சுற்றுலாபயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
இதையடுத்து வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலாத்தலங்களாக தூண்பாறை, பைன்பாரஸ்ட், குணாகுகை உள்ளிட்டவற்றிற்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டது.
சைக்கிள் சவாரி, குதிரை சவாரிக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில், படகு சவாரிக்கு அனுமதியளிக்கவேண்டும் என சுற்றுலாபயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில் இன்று முதல் ஏரியில் படகு சவாரிக்கு அனுமதியளித்து கொடைக்கானல் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார். இதையடுத்து சுற்றுலாத்துறை, நகராட்சி சார்பில் இயக்கப்படும் படகு குழாம்களில் இன்று படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மகிழ்ச்சியடைந்தனர்.
எட்டு மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக தொடங்கப்பட்ட படகு சவாரியில் முதலாவது சவாரி செய்ய வந்த புதுமணத் தம்பதிகளுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இனிப்புகள் வழங்கப்பட்டது.
கொடைக்கானலில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக இன்று சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT