Published : 07 Dec 2020 11:42 AM
Last Updated : 07 Dec 2020 11:42 AM
தென் தமிழகத்திலேயே மிகப்பெரிய கரிமேடு மீன் மார்க்கெட்: நிரந்தரமாக மாட்டுத்தாவணியில் அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தென் தமிழகத்திலேயே மிகப்பெரிய மதுரை கரிமேடு மீன்மார்க்கெட், கரோனா ஊரடங்கால் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே மாற்றப்பட்டநிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பிய பிறகும் அவர்கள் பழைய இடத்திற்கு திரும்பிச் செல்ல மறுத்து அமைச்சர்கள் ஆதரவுடன் தற்போதுள்ள இடத்திலேயே செயல்படுகின்றனர்.
அதனால், மாட்டுத்தாவணி பகுதியிலே நிரந்தரமாக கரிமேடு மீன்மார்க்கெட் செயல்படுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தென் தமிழகத்தில் மிகப்பெரிய மீன்மார்க்கெட் மதுரை கரிமேட்டில் அமைந்துள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த மீன்மார்க்கெட்டிற்கு ராமேசுவரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கேரளா மற்றும் ஆந்திராவில் இருந்து தினமும் 200 வாகனங்களில் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன.
மொத்தம் 80 மொத்த விற்பனை கடைகள், 30 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. வியாபாரிகள், ஒவ்வொரு கடைக்கும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3,500 வரை மாதவாடகை செலுத்துகின்றனர்.
மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட அன்டை மாவட்ட மீன் வியாபாரிகள் இந்த மார்க்கெட்டில் வந்து மீன்களை வாங்கி சென்று விற்பனை செய்வார்கள். அனைத்து வகை கடல் மீன்களும் இங்கு கிடைப்பதால் நள்ளிரவில் செயல்பட தொடங்கும் இந்த மார்க்கெட்டில் அதிகாலையில் விற்று தீர்ந்து விடுகின்றன.
ஆட்டுக்கறி விலை கூடுதல் என்பதால் கோழிக்கறி வாங்கி சாப்பிட விருப்பமில்லாத நடுத்தர, ஏழை மக்கள் தங்கள் பொருளாதாரத்திற்கு தகுந்த மீன்களை வாங்கி விரும்பி சாப்பிடுகின்றனர்.
மேலும், மீன் உணவு கண் பார்வை மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதாக மருத்துவர்கள் கூறுவதால் மீன்களை ஏழை, பணக்காரர்கள் வித்தியாசமில்லாமல் வாங்கி சென்று சாப்பிடுகின்றனர்.
அதனால், தென் மாவட்டங்களில் பிடிக்கப்படும் மீன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைக் காட்டிலும் மதுரை கரிமேடு மீன் மார்க்கெட் உள்ளூரில் விற்பனை செய்வது அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த மதுரை கரிமேடு மீன்மார்க்கெட் கரோனா ஊரடங்கால் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே உள்ள காலிஇடத்திற்குமாற்றப்பட்டது. தற்போது அந்த இடத்திலே செயல்படுகிறது.
விசாலமான இடம், தென்தமிழகத்தில் உள்ள கடற்கரை மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் கொண்டு வரும் மீன்களை ‘ரிங்’ ரோடு வழியாக எளிதாக மார்க்கெட்டிற்கு கொண்டு வருவதற்கும், நகரப்பகுதியில் மீன் வாகனங்களில் நெரிசல் ஏற்படாமல் இருப்பதாலும், மீன் வியாபாரிகள் இதே இடத்திலே தொடர்வதை விரும்புகின்றனர்.
அதனால், கரோனா கட்டுக்குள் வந்து அனைத்து வியாபாரி நிறுவனங்களும், மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பியப்பிறகும் கரிமேடு மீன் மார்க்கெட் மட்டும் இன்னும் அதன் இயல்பான இடத்திற்கு செல்லாமல் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகேயே செயல்படுகிறது. அதனால், கரிமேடு, காளவாசல், ஆரப்பாளையம், பெரியார் பஸ்நிலையம் உள்ளிட்ட மதுரையின் தென்பகுதி மக்கள் வழக்கம்போல் கரிமேடு மீன்மார்க்கெட்டில் மீன்கள் வாங்கி சாப்பிட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், இதற்காக தென் மூலையில் இருந்து வைகை ஆற்றைகடந்து மதுரையின் வடக்குப்பகுதி மூலையான மாட்டுத்தாவணி பஸ்நிலையம் வரை வர வேண்டிய உள்ளது. அதனால், அப்பகுதி சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் பகுதியில் செயல்படும் மீன் மார்க்கெட்டை ஆரப்பாளையம் அருகே உள்ள கரிமேட்டிற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மொத்த மீன் வியாபாரிகள் தற்போதுள்ள இடமே விசாலமான இடவசதியுடன் இருப்பதால் இந்த இடத்திலேயே தொடர அனுமதிக் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் உள்ளூர் அமைச்சர்களிடம் நேரில் சென்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கரிமேடு மீன்மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க செயலாளர் ராமநாதன் கூறுகையில், ‘‘நாங்கள் ஏற்கெனவே மாநகராட்சி ஆணையாளராக நந்தகோபால் இருந்தபோதிலிருந்து நெரிசலாக இருக்கும் கரிமேடு மார்க்கெட்டை மாற்றுவதற்கு மனு கொடுத்துவருகிறோம்.
அமைச்சர்கள் தற்போதுள்ள இடத்திலேயே தொடர்வதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். சில்லறை வியாபாரிகள் 30 பேரும், 80 மொத்த வியாபாரிகளும் இந்த மார்க்கெட்டில் உள்ளோம். சில்லறை வியாபாரிகளை வேண்டுமென்றால் அங்கு மாற்றிவிட்டு எங்களை இதே இடத்திலே தொடர அனுமதிக்க வேண்டும்.
நாங்கள் நள்ளிரவில் விற்பனையை ஆரம்பித்து காலையில் முடித்துவிடுவதால் எங்களால் மாட்டுத்தாவணி பகுதியில் எந்த பாதிப்பும் வராது, ’’ என்றனர்.
சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் கூறுகையில், ‘‘மாட்டுத்தாவணி பகுதியில் ஏற்கெனவே நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது மீன்மார்க்கெட் நிரந்தரமாக அமைந்தால் அங்கு வரும் வாகனங்களால் கரிமேடு போல் நெரிசல் அதிகரிக்கும். அதனால், வேறு ஏதாவது பகுதிக்கு இடமாற்றம் செய்யலாம், ’’ என்றார்.
மாநகராட்சி நிர்வாகத்தில் கேட்டபோது, ‘‘மாட்டுத்தாவணி பகுதிக்கு கரிமேடு மீன் மார்க்கெட்டை மாற்றுவதற்கு தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை, ’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT