Published : 07 Dec 2020 03:14 AM
Last Updated : 07 Dec 2020 03:14 AM

திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த ஸ்டாலின்: நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை காட்டி விவசாயிகள் வேதனை

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த மேலப்பிடாகை கிராமத்தில், மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட நேற்று வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், மழைநீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்களை விவசாயிகள் எடுத்துக் காட்டுகின்றனர். உடன், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர்.

திருவாரூர்/ நாகப்பட்டினம்

திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அப்போது நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை காட்டி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

'புரெவி' புயல் தாக்கத்தின் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாதிப்பு, கால்நடைகள் உயிரிழப்பு, வீடுகள் சேதம் எனபல்வேறு இழப்புகளை பொதுமக்கள் சந்தித்துள்ளனர்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.

அம்மையப்பன், காவனூர், திருமதிக்குன்னம், கமலாபுரம், வடகரை, கிழமணலி, மாங்குடி ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, கச்சனம் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மழை நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு அரிசி, காய்கறி, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்னர், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே மேலப்பிடாகை கிராமத்தில் மழை பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, மழைநீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்களை அவரிடம் எடுத்துக் காண்பித்து, விவசாயிகள் தங்களின் வேதனையை தெரிவித்தனர்.

தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்டுள்ள மேலப்பிடாகை, மீனம்பநல்லூர், கருங்கண்ணி, மேல நாகூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 500 பேருக்கு அரிசி, புடவை, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அவருடன், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்எல்ஏக்கள் கலைவாணன், மதிவாணன், எம்.பி செல்வராஜ், நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் உள்ளிட்டோர் சென்றனர்.

திருக்குவளையில் மரியாதை

முன்னதாக, நாகை மாவட்டம் திருக்குவளை சென்ற மு.க.ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த வீட்டில், கருணாநிதியின் தந்தை முத்துவேலர், தாயார் அஞ்சுகம் அம்மையார், கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x