Published : 06 Dec 2020 07:51 PM
Last Updated : 06 Dec 2020 07:51 PM

மாநிலங்களின் உரிமையைப் பறிகும் தான்தோன்றித்தனமாகப் பிறப்பிக்கப்பட்ட விவசாய சட்டங்கள்: மத்திய அரசுக்கு வீரமணி கண்டனம்

மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து8 ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு திராவிடர் கழகம் ஆதரவு அளிக்கும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அத்தியாவசிய பொருள்கள் சட்டத் திருத்தம், வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள்மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு என்ற மூன்று சட்டங்களை மத்திய அரசு அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது.

விவசாயம் என்பது மாநில அரசின் துறையாகும். மாநில அரசுகளின் கருத்தையும்கூட கேட்காமல், மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் வகையிலும் இந்தச் சட்டம் தான்தோன்றித்தனமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டங்களை இந்தியா முழுவதும் விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். குறிப்பாக பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் இந்தியாவின் தலைநகரமான டில்லியே நிலைகுலையும் அளவுக்கு லட்சக்கணக்கில் குவிந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.விவசாயிகளை ஆதரித்து அகில இந்திய அளவில் லாரிகளும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்ப்பரேட்டுகளுக்கான அரசு விவசாயம் என்பது கார்ப்பரேட்டுகளின் கைக்கு மாறப் போகிறது என்ற அச்சத்தில், இந்தியாவே எதிர்க்கிறது என்பதை வெளிப்படுத்த நாளை மறுநாள் (8.12.2020) அகில இந்திய அளவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் திராவிடர் கழகம் வரவேற்கிறது - ஆதரிக்கிறது. கழகத் தோழர்கள் இதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களும் ஆதரவு தந்து இந்தப் போராட்டத்தை வெற்றியாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x