Published : 06 Dec 2020 03:48 PM
Last Updated : 06 Dec 2020 03:48 PM

தமிழ்வழி கல்வி இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

தமிழ்வழி கல்வி இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (டிச. 06) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இட ஒதுக்கீடு, பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஒன்பது மாதங்களாகியும் ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பது சமூகநீதிக்கு எதிரானது.

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று விசாரணைக்கு வந்த போது தான் இது தொடர்பான சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது, தொடக்கம் முதலே தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த விஷயத்தில் ஆளுநர் செய்யும் தாமதம் மிகவும் வேதனையளிக்கிறது.

தமிழ்வழிக் கல்வி இடஒதுக்கீட்டுக்கான சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழக ஆளுநர் இந்த அளவுக்கு காலதாமதம் செய்வது தேவையற்றது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் தனி இட ஒதுக்கீடு வழங்குவது, மகளிருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது, தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது போன்ற சிறப்பு ஒதுக்கீடுகளை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பதை பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் உறுதி செய்திருக்கின்றன.

அதுமட்டுமின்றி, தமிழ்வழியில் படித்தவர்களுக்காக இட ஒதுக்கீடு என்பது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தானே தவிர, யாருடைய உரிமையையும் பறிக்கும் செயல் அல்ல. அத்தகைய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தயங்குவது ஏன்? எனத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியைத் தான் ஊக்குவிக்க வேண்டும். ஜெர்மன் மொழி வழிக் கல்வியையோ, பிரெஞ்ச் மொழி வழிக் கல்வியையோ ஊக்குவிக்க முடியாது. தமிழ்வழியில் பயில்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்ட நிலையில், தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிப்பதற்காக தமிழில் படிப்பவர்களுக்கான இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தினால் கூட தவறில்லை; அது மிகவும் சரியானதாக இருக்கும்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் எந்த சட்டத்தையும் நிராகரிக்கும் உரிமை ஆளுநருக்கு இல்லை; சட்டத்தின் நோக்கத்தில் ஆளுநருக்கு உடன்பாடு இல்லை என்றால் அதை அரசுக்குத் திருப்பி அனுப்பலாம்.

அத்தகைய சூழலில் ஆளுநரின் ஒப்புதலுக்காக சட்டத்தை அரசு மீண்டும் அனுப்பினால் அதற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை. அதேநேரத்தில், ஒரு சட்டத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதால், அதைப் பயன்படுத்திக் கொண்டு தமக்கு உடன்பாடு இல்லாத சட்டங்கள், பரிந்துரை தீர்மானங்களை கிடப்பில் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை தீர்மானம், மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டுச் சட்டம் ஆகியவற்றிலும் இதே அணுகுமுறையைத் தான் ஆளுநர் கையாண்டார்.

தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு மட்டும் அண்மையில் ஒப்புதல் அளித்தார். தமிழ்வழி கல்வி இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம், 7 தமிழர் விடுதலை ஆகிய விவகாரங்களில் ஆளுநரின் தாமதப்படுத்தும் தந்திரம் தொடர்கிறது. இது நியாயமல்ல.

தமிழ்மொழியில் படிப்பவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட பாமக முக்கியக் காரணம் ஆகும். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2010 ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பாலான பணிகளுக்கு பட்டப்படிப்பு அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், ஏற்கெனவே பள்ளிக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை ஆங்கில வழியில் படித்த பலரும், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை மட்டும் அஞ்சல் வழியில் தமிழ் மொழியில் படித்துவிட்டு, அரசுத் துறை வேலைவாய்ப்புகளில் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இதனால், இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் அடிப்படை நோக்கமே சிதைக்கப்பட்டுவிட்டது. இதைத் தடுக்கும் வகையில், பள்ளிக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் இந்த 20% இட ஒதுக்கீடு கிடைக்கும் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. அதனடிப்படையில் தான் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

தமிழர், தமிழ் மொழி, சமூகநீதி சார்ந்த சட்டங்களை ஆளுநர் பன்வாரிலால் முடக்கி வைத்திருப்பது எந்த வகையிலும் சரியல்ல. இதற்காக எத்தகைய சட்ட ஆலோசனை நடத்தினாலும், இவ்வளவு காலதாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழ்வழிக் கல்வி 20% இட ஒதுக்கீட்டுச் சட்டத்திருத்தத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆளுநர் அதை செய்ய மறுத்தால், தமிழக அரசே நேரடி அரசாணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x