Published : 06 Dec 2020 02:35 PM
Last Updated : 06 Dec 2020 02:35 PM

அரசியல் கட்சிகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம் வேண்டுகோள்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மாநில தலைவர் எம்.எஸ்.முருகேசன், மாநில பொதுச் செயலாளர் அ.தி.அன்பழகன் ஆகியோர் கூட்டாக இன்று (டிச. 06) வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"எதிர்வரும் 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் உணவு பாதுகாப்புத்துறை சார்ந்த கீழ்க்கண்ட கோரிக்கைகளையும் வாக்குறுதிகளாக சேர்க்க தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்.

05.08.2011 முதல் இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தப்பட்டு வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான, தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யவும், சட்ட விதிகளுக்கு முரணாக விற்பனை செய்யப்படும் குட்கா போன்றவற்றைத் தடுக்கவும், கலப்படமற்ற சரியான உணவு கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

பாதுகாப்பான உணவு குறித்து மிகப்பெரிய அளவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மக்கள் நலனுக்கு கேடு விளைவிக்கும் 'ஜங்க் புட்' உள்ளிட்டவற்றின் விற்பனையை முறைப்படுத்த வேண்டும்.

சந்தேகம் ஏற்படும் உணவு வகைகளை நுகர்வோரே அரசு செலவில் குறைந்த கட்டணத்தில் பரிசோதனை ( உணவு பகுப்பாய்வு ) செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

மாவட்டத்திற்கு ஒரு உணவு பகுப்பாய்வு கூடம் ஏற்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே உள்ள 6 உணவு பகுப்பாய்வு கூடங்களும் உரிய தரத்துடன் செயல்பட உரிய கட்டமைப்பு வசதி மற்றும் தேவையான அளவில் பணியாளர்கள் நியமனம் ஆகியவை செய்ய வேண்டும்.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால் குறித்து தொடர்ந்து புகார் வந்துகொண்டிருக்கும் நிலையில் தரமான வகையில் மக்களுக்குக் கிடைக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பான உணவு கிடைக்க செயல்பட வேண்டிய உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகங்களுக்கு, உதவியாளர் பணியிடம் அனுமதிப்பது, வாகன வசதி, உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தனியே தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளோடு கட்டிடங்களும், மாவட்ட நியமன அலுவலர் அலுவலகங்களுக்குத் தேவையான வசதிகளோடு கட்டிடங்கள் கட்டித்தர உரிய நிதி ஒதுக்கீடு வழங்கி ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.

காலியாக உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பணியிடங்கள் உடனடியாக நிரப்பிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி தகுதியுள்ளவர்கள் மட்டுமே நேரடி நியமனம் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களிலிருந்து பதவி உயர்வின் வழியாக மாவட்ட அளவில் நியமனம் செய்யப்பட வேண்டும். சட்ட விதிகளை மீறி மாவட்ட நியமன அலுவலர்களாக தொடர்வோர், அவர்களின் தாய்த் துறையில் பணியாற்றும் வகையில் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

வட்டார அளவில் உரிய விழிப்புணர்வை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பங்கு பெறும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மீது பல்வேறு காரணங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட வேண்டும்.

என்ற மக்கள் நலன் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை பணியாளர்கள் நலன் சார்ந்த இந்த வேண்டுகோள்களை தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்த்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்".

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x