Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
கடந்த 3 நாட்களாக பெய்தகனமழையால் கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று குறிஞ்சிப்பாடி சட்டமன்ற பகுதிக்கு உட்பட்ட ஆடூர்அகரம் ஊராட்சி பரதம்பட்டு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி அரிசி மற்றும் உணவுஉள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து பூவணிகுப்பம் பகுதிகளில் பொதுமக்களுக்கு அரிசி, போர்வை, பிஸ்கட் உள்ளிட்டவற்றை வழங்கினார். தொடர்ந்து தானூர் மேட்டுப்பாளையத்தில் சாலையில் இருந்த மழை தண்ணீரில் நடந்து சென்று மூழ்கிய விளைநிலங்களை பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதைத் தொடர்ந்து சிதம்பரம் தனியார் திருமண மண்டபத்தில் மழையால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆறுதல் கூறி அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
ஸ்டாலினுடன் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருஎம்எல்ஏ, கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், புவனகிரி எம்எல்ஏ சரவணன், முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன், குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார், பாலமுருகன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
இதேபோல திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச. 6) நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT