Published : 05 Dec 2020 07:01 PM
Last Updated : 05 Dec 2020 07:01 PM
ஆளுநரின் செயல்பாடுகளால் புதுச்சேரி மாநிலத்துக்குத்தான் இழுக்கு ஏற்படுகிறது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (டிச.5) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயத்தை அம்பானி, அதானிகள் ஏகபோகமாக அனுபவிக்கவே மத்திய அரசு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசு எவ்வித நிபந்தனையுமின்றி வேளாண் திருத்தச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அடுத்தடுத்து இரண்டு புயல்களால், புதுச்சேரியில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. இதனை ஆய்வு செய்ய மத்தியக் குழுவானது வரும் திங்கட்கிழமை (7-ம் தேதி) வருகிறது. புயல் பாதிப்பு மொத்த சேதம் ரூ.400 கோடி ஆகும் இதில் இடைக்கால நிவாரணமாக ரூ.100 கோடி கொடுக்க வேண்டுமெனப் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.
மின்விநியோகம் தனியார் மயமாக்கப்படுவதை ஏற்க மறுத்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். இருப்பினும் மத்திய அரசு ஏற்காமல் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு செவிசாய்க்காத நிலையில் நீதிமன்றம் செல்லுங்கள், அரசு சார்பில் நாங்களும் செல்லத் தயாராக இருக்கிறோம் என மின்துறை ஊழியர்கள் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தோம். இருப்பினும் போராட்டத்தை அவர்கள் விலக்கிக் கொள்ளவில்லை.
பல இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டபோதும், அதனைச் சரி செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரம் என்பது அத்தியாவசியம் என்ற சட்டத்தின் கீழ் வருகிறது. எனவே தொழிலாளர்கள் அதன் விளைவுகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
அரிசியாகப் போடுவதை கிரண்பேடி ஏற்றுக்கொள்ளாததால், தற்போது பணமாக வழங்கப்படுகிறது. ரங்கசாமி முதல்வராக இருந்தபோதுதான் பணம் அளிப்பதே முதன்முதலாக நடைமுறைக்கு வந்தது. அரிசி போட்டால் ஊழல் நடக்கும் என்கிறார்கள். இந்திய உணவுக் காப்பீட்டுக் கழகத்திடம் அரிசி வாங்கினால் ஊழல் எப்படி நடக்கும்?.
இத்தகைய சூழலில் பணமாகப் போட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளோம். 5 மாதத்துக்கான பணம் போட ரூ.79 கோடி ஒதுக்கினோம். ஆனால் கிரண்பேடி 3 மாதமாக இதனை மாற்றி அனுமதி தந்துள்ளார். இந்தப் புயல் நேரத்தில் மக்களுக்கு 5 மாதத்துக்கான தொகையைக் கொடுக்க வேண்டும் என்று சொன்னோம். ஆனால் அவர் இதனை ஏற்கவில்லை.
கிரிக்கெட் ஸ்டேடிய விவகாரத்தில் நிலம் ஆக்கிரமிப்பு செய்தால் நடவடிக்கை எடுக்க விதிகள் இருக்கின்றன. ஆக்கிரமிப்பை நீக்க வேண்டிய வேலையை அதிகாரிகள் செய்வார்கள். மாநிலத்துக்குக் கிரிக்கெட் ஸ்டேடியம் அவசியம், இதனை யார் கொண்டுவந்தாலும் அது புதுச்சேரியின் வளர்ச்சிக்காகத்தான். கிரிக்கெட் ஸ்டேடியம் நடத்துவோர், இவருக்கு வேண்டியவர், அவருக்குத் தெரிந்தவர் எனக் கற்பனையாக நினைத்துக்கொண்டு கிரண்பேடி செயல்படுகிறார்.
புதுச்சேரி வீரர்களை அணியில் சேர்க்கவில்லையெனப் புகார் வந்தது. மாநில வீரர்களை அணியில் சேர்க்காவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். இதற்கிடையே கிரிக்கெட் சங்கம் தொடர்ந்த வழக்கில், கிரண்பேடியின் விதி மீறிய செயலை நீதிமன்றத்தில் 3 மணி நேரம் விவாதித்துக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆளுநரின் செயல்பாடுகளால் மாநிலத்துக்குத்தானே இழுக்கு ஏற்படுகிறது. வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கிறார். அங்கன்வாடி மூலம் மழலைகளுக்குக் கொடுக்கும் சத்துமாவு, சுண்டலைக் கூட பணமாக அளிக்க வேண்டுமென நிர்ப்பந்தம் செய்கிறார். எந்தவித அதிகாரமும் இல்லாமல் அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். இது சம்பந்தமாக மேல் நடவடிக்கையை நாங்கள் எடுக்கிறோம். எந்தச் சூழலிலும் எங்களுடைய அரசு மக்களின் பக்கம் இருக்கிறது. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவோம்.''
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT