Published : 05 Dec 2020 06:16 PM
Last Updated : 05 Dec 2020 06:16 PM
பாஜகவுடன் கூட்டணியாக இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து உடனடியாக தமிழக சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும், அதன் மூலம் பாவமன்னிப்பு தேடுங்கள் என முதல்வருக்கு ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
சேலத்தில் நடந்த டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து நடந்த திமுகவின் கருப்புக்கொடி போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
“ஏழை விவசாயிகளைப் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஒரு ஏழைத் தாயின் மகன் கொண்டு வருகிறார். விவசாயிகளைப் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஒரு விவசாயி ஆதரிக்கிறார். யார் அந்த விவசாயி என்பது உங்களுக்குத் தெரியும். பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்துகொண்டிருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர். இதுதான் இந்த நாட்டில் நடக்கும் கொடுமையிலும் பெரிய கொடுமை.
வறுமையைப் பற்றித் தெரியாத ஒரு பிரதமர் இந்த சட்டத்தைக் கொண்டு வந்தார். விவசாயம் பற்றித் தெரியாத ஒரு முதல்வர் இந்த சட்டத்தை ஆதரிக்கிறார் என்றால் பரவாயில்லை. ஆனால் கொண்டு வருபவர் ஏழைத்தாயின் மகன். ஆதரிப்பவர் தன்னை ஒரு விவசாயி என்று ஊர் ஊராகச் சென்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பவர்.
கடந்த 3-ஆம் தேதி சேலத்தில் பத்திரிகை நிருபர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அந்தச் சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அதிபுத்திசாலியைப் போலக் கேட்டுள்ளார். சட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள விவசாயிகள் சொல்கிறார்கள். யாருக்கு இதனால் பாதிப்பு என்று கேட்கிறார் முதல்வர்.
இது கத்தி, குத்தினால் ரத்தம் வரும் என்று தான் சொல்ல முடியும். இது துப்பாக்கி, சுட்டால் மரணம் ஏற்படும் என்று தான் சொல்ல முடியும். குத்துவதற்கு முன்னால் ரத்தம் வரவில்லையே, சுடுவதற்கு முன்னால் மரணம் ஏற்படவில்லையே என்று விவரம் இல்லாமல் கேட்பது போல எடப்பாடி பழனிசாமி உளறிக் கொண்டுள்ளார்.
இந்த மூன்று சட்டங்களையும் விவசாயிகள் ஏன் எதிர்க்கிறார்கள் என்றால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை என்று எதையும் இந்த சட்டங்கள் சொல்லவில்லை. விவசாயி என்ன விளைவிக்கலாம், யாருக்கு விற்கலாம், என்ன விலைக்கு விற்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையையும், சுதந்திரத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குகிறது இந்தச் சட்டங்கள்.
தரகர்களை ஒழிக்கிறோம் என்று சொல்லி, பெரிய வியாபாரிகள், பெரிய கிடங்குகள் வைத்திருக்கும் நிறுவனங்கள், பன்னாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு விவசாயிகளை அடிமைகளாக ஆக்குகிறது, இந்தச் சட்டங்கள்! இந்திய உணவுக்கழகம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், நேரடி கொள்முதல் நிலையங்கள் ஆகியவை இனி இருக்குமா என்பது கேள்விக்குறியே. உணவுப் பாதுகாப்பும், நியாய விலைக் கடைகளின் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகமும், கேள்விக்குறியாகும்.
உழவர் சந்தைகளை இனி அனுமதிக்க மாட்டார்கள்! சிறு-குறு-நடுத்தர விவசாயிகள் தான் இந்தியாவில் 95 சதவிகிதம் பேர். இவர்களிடம் குளிர்பதனக் கிடங்கு இருக்கிறதா? இல்லை! எனவே இனி குளிர்பதனக் கிடங்கு வைத்திருப்பவர் கையில் விவசாயம் போய்விடும்.
ஏற்கனவே, கரும்பு ஆலைகளுக்கு கரும்பைக் கொடுத்துவிட்டு, ஆண்டுக்கணக்கில் பணம் வாங்க முடியாமல் தவிக்கும் பல ஆயிரக்கணக்கான கரும்பு விவசாயிகளைப் போல, அனைத்து விவசாயிகளையும் தவிப்புக்கு ஆளாக்க நினைக்கிறார்கள். அதனால் தான் விவசாயிகளும் எதிர்க்கிறார்கள். நாமும் எதிர்க்கிறோம்.
கரோனா காலத்தில் அவசர அவசரமாக இந்த சட்டங்களை எதற்காக நிறைவேற்ற வேண்டும்? வேளாண்மை பற்றி மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்று தான் சட்டத்தில் இருக்கிறது. அதை மீறி மத்திய அரசு எதற்காக தலையிட வேண்டும்?
இந்தச் சட்டத்தில் விவசாயிக்கு இழப்பீடு உண்டா? கடன் தள்ளுபடி உண்டா? உணவு தானிய மானியம் உண்டா? உர மானியம் உண்டா? இடு பொருள்கள் இருப்பு மற்றும் விநியோகம் உண்டா? பொருட்களை பதப்படுத்தி வைக்க நிதி உதவி உண்டா? விவசாயத் தொழிலாளர்க்கு வேலை உத்தரவாதமோ, குறைந்தபட்சக் கூலியோ உண்டா? எதுவும் இல்லை. இதனால் தான் இந்த சட்டங்களை விவசாயிகளும் எதிர்க்கிறார்கள். நாமும் எதிர்க்கிறோம்.
இவை எதற்கும் பதில் சொல்லாத முதல்வர், விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஏஜெண்ட்டுகளும், வியாபாரிகளும் சேர்ந்து பஞ்சாப் விவசாயிகளைத் தூண்டி விடுவதாக சேலத்து விஞ்ஞானி எடப்பாடி பழனிசாமி கண்டுபிடித்திருக்கிறார். இந்தக் கண்டுபிடிப்பை பஞ்சாப்பிலோ, டெல்லியிலோ போய்ச் சொல்ல பழனிசாமி தயாரா?
'இந்தியா முழுவதும் கொண்டு போய் விற்றுக் கொள்ளலாம்' என்பதை பெரிய கண்டுபிடிப்பைப் போல பழனிசாமி சொல்லி இருக்கிறார். எடப்பாடியில் தக்காளி பயிரிடும் விவசாயி, அதிக விலைக்காக பஞ்சாப் போய் விற்பாரா? அல்லது அவரை பஞ்சாப் மார்க்கெட்டுக்கு போகச் சொல்கிறாரா? வாய்க்கு வந்தபடி எல்லாம் முதல்வர் பேசுவதா?
நிருபர்கள் வாதம் செய்யமாட்டார்கள் என்பதற்காக ஊர் ஊராகப் போய் உளறுகிறார். வாய்க்கு வந்தபடியெல்லாம் நிருபர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். நம்முடைய கட்சியின் மீது, தலைவரின் மீது, என் மீது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டுகள். அவர் செய்து கொண்டு இருக்கக்கூடிய ஊழல்களை எல்லாம் இப்போது அம்பலப்படுத்தி கொண்டிருக்கிறோம். அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவர் நேரடியாக மக்களை சந்தித்து ஓட்டு வாங்கி முதல்வராக வந்திருந்தால் நான் வரவேற்று இருப்பேன். அவர் எப்படி முதல்வர் ஆனார் என்பது உங்களுக்கு தெரியும். அவருடைய ஊழலை மூடி மறைப்பதற்காக 2ஜி-யாம், ராசாவாம், சர்க்காரியா கமிஷனாம். எம்ஜிஆர் காலத்தில் போடப்பட்ட வழக்கு அது. கடைசியில் என்ன சொன்னார் நான் சொல்லவில்லை, சேலம் கண்ணன் சொன்னார் என்றார். என்ன ஆனது அந்த வழக்கு. 2ஜி வழக்கு என்ன ஆனது?
அவர் கொடுத்து பேட்டிக்கு நம்முடைய துணை பொதுச்செயலாளர் ராசா இரண்டு நாட்களுக்கு முன்பு பத்திரிகை நண்பர்களை கூப்பிட்டு அழகாக விளக்கம் சொல்லியிருக்கிறார். உங்களுடைய முதல்வராக இருந்த அம்மையார் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைக்குப் போன வரலாறு உங்கள் வரலாறு. எங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை நாங்கள் அத்தனைப் பேரும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறோம் இதுதான் திமுக வரலாறு.
நான் ஆதாரத்தை எடுத்துக் கொண்டு கோட்டைக்கு வருகிறேன். மூன்று நாளில் கூப்பிடுங்கள்; வருகிறேன். முதல்வர் அல்ல, அமைச்சர்கள் அல்ல, அதிகாரிகள் அல்ல, உங்களுக்கு தெரிந்த சட்டவல்லுநர்களையெல்லாம் அழைத்து உட்கார வையுங்கள் நான் தன்னந்தனியாக வருகிறேன் விவாதிப்போம் தயாரா என்று சொடுக்கு போட்டு கேட்டார். மூன்று நாட்கள் தாண்டி விட்டது ஏன் இன்னும் எடப்பாடி வாய்திறக்கவில்லை.
தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால், ராசாவுடன் விவாதிக்கத் தயாரா? அதற்கு வக்கில்லை, வகையில்லை, யோக்கியதை இல்லை, அருகதை இல்லை, ஏதோ பத்திரிகை நிருபர்களை கூட்டி வைத்து எதையும் கேள்வி கேட்க கூடாது என்று சொல்லி வைத்து விட்டு அவர்களுக்கு அவர்களிடம் விளக்கம் என்று சொல்லிவிட்டு புலம்பிக் கொண்டு இருக்கிறீர்கள். மூன்று நாள் ஆகிவிட்டது அந்தச் சவால் அப்படியே இருக்கிறது அந்த சவாலை ஏற்றுக் கொள்ள தயாரில்லை.
ஆதாரம் கொடுங்கள், ஆதாரம் கொடுங்கள் என்று கேட்கும் பழனிசாமி, அந்த சட்டங்களில் குறைந்தபட்ச ஆதார விலை உண்டு என்ற வாசகம் இருந்தால் காட்டுங்கள். "MSP" எனப்படும் Minimum Support Price என்ற வார்த்தை அச்சட்டத்தில் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை. அதனால் தான் விவசாயிகள் வீதிக்கு வருகிறார்கள்.
கம்பெனிகளோடு விவசாயிகள் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என்று முதல்வர் சொல்கிறார். அந்த ஒப்பந்தம் மீறப்பட்டால், நீதிமன்றம் போக முடியாது என்பது அவருக்குத் தெரியுமா? தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் மாட்டார். ஏனென்றால் அவர் விவசாயி அல்ல. வேடதாரி.
இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, தீர்மானம் போட்டோம் - மாபெரும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்தினோம். 3500-க்கும் மேற்பட்ட இடங்களில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு போராட்டம் நடத்தினோம். காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.
அங்கு பேசுகிறபோது, “கேரளா நீதிமன்றம் செல்கிறது. இன்னும் பல்வேறு மாநிலங்கள் நீதிமன்றத்துக்கு செல்லவிருக்கின்றன. எனவே நமது தமிழக அரசும் வழக்குப் போட வேண்டும். நீதிமன்றம் செல்ல வேண்டும்” என்று கோரிக்கை வைத்தேன். இல்லையென்றால் திமுக நீதிமன்றம் செல்லும் என நான் உறுதி தந்தேன்.
கடைசிவரை ஆளும்கட்சியான அதிமுக நீதிமன்றம் செல்லவில்லை. அதனால், கட்சியின் சார்பில் திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கேரளாவும் பஞ்சாபும் வழக்கு தாக்கல் செய்துள்ளது. ஆனால் நம் மாநில விவசாய முதல்வர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்.
நானும் ரவுடி தான் என்பதைப் போல நானும் விவசாயி தான் என்று ஊர் ஊராகப் போய்ச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். இந்த விவசாயியால் விவசாயிகளுக்கும் பயனில்லை. மக்களுக்கும் பயனில்லை. அவரை வீட்டுக்கு அனுப்பும் பணியில் நாட்டு மக்கள் முழுமையாக ஈடுபட்டு வரும் இந்த நேரத்தில், விவசாயிகளைக் காக்க மக்களைக் காக்க மண்ணைக் காக்க நாம் போராட வேண்டி உள்ளது.
டெல்லியில் நடக்கும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை பார்த்தபிறகு, இன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடக்கும் போராட்டங்களைக் கண்ட பிறகாவது முதல்வர் பழனிசாமி விவசாயிகளுக்கு செய்த தனது துரோகத்திற்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்ள முன்வரவேண்டும்
பாஜகவுடன் கூட்டணியாக இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து உடனடியாக தமிழக சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் அவருக்கு பாவமன்னிப்பு கிடைக்கும்”.
இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT