Published : 05 Dec 2020 05:48 PM
Last Updated : 05 Dec 2020 05:48 PM
புரெவி புயலின் தாக்கத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று இரவில் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
2-வது நாளாக மழை:
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மன்னார் வளைகுடா அருகே நிலை கொண்டிருந்தது. இது நேற்றும் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று இரவில் பரவலாக மழை பெய்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை நீடித்தது. தொடர்ந்து இரவு முழுவதும் லேசான தூறல் மழை பெய்து கொண்டிருந்த போதிலும் இடையிடேயே அவ்வபோது மிதமான மழையும் பெய்தது. இன்று பகலிலும் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.
குடியிருப்புகளை சூழ்ந்த நீர்:
இந்த மழை காரணமாக தூத்துக்குடி நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் மீண்டும் தேங்கியது. பிரையண்ட் நகர், சிதம்பரநகர், மாசிலாமணிபுரம், தபால் தந்தி காலனி, ராஜீவ் நகர், லூர்தம்மாள்புரம், பூபாலராயர்புரம், ஜார்ஜ் சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை சூழந்து தெருக்களில் மழைநீர் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி நின்றது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் திண்டாடினர்.
தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கி சகதிக் காடாக மாறியது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாயினர். தூத்துக்குடி நகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் பணி 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெறுகிறது. அதுபோல மோட்டார் பம்புகளை இயக்க முடியாத பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் பணி நடைபெற்றது.
இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஊருணிகளுக்கு தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டிருப்பதால் மாவட்டத்தில் மழை மேலும் ஒருசில நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
143 மோட்டார் பம்புகள்:
இது மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு பரவலாக நல்ல மழை பெய்திருக்கிறது. தூத்துக்குடி நகர பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இங்கு ஏற்கனவே மாநகராட்சியினர் டீசல் பம்புகள் மூலம் நீரை வெளியேற்றி வருகின்றனர். தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் 143 மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கூடுதலாக மதுரை மாநகராட்சி மற்றும் திருச்சி மாநகராட்சியில் இருந்து தலா 10 எண்ணிக்கையில் 40 எச்பி திறன் கொண்ட மோட்டார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மோட்டார் மூலம் நீர் வெளியேற்ற முடியாத பகுதியில் டேங்கர் லாரிகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியின் 4 லாரிகள், திருச்சி மாநகராட்சியின் 4 லாரிகள், வாடகை அடிப்படையில் 4 லாரிகள் என மொத்தம் 12 டேங்கர் லாரிகள் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதையும் மின் பணியாளர்கள் சரி செய்து வருகின்றனர். பகலில் பெரியளவில் மழை ஏதும் இல்லை. மழை குறித்த அறிவிப்பும் ஏதும் இல்லை. நீர் வெளியேற்றும் பணிகள் போர்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. நிவாரண முகாம்களும் தொடர்ந்து இயங்கி வருகின்றன. தூத்துக்குடி மாநகராட்சி தாழ்வான பகுதியில் உள்ள 20 குடும்பங்கள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர். அதேபோல் காயல்பட்டினம் பகுதியிலும் தாழ்வான பகுதியில் உள்ள 2 குடும்பங்கள் அழைத்து வரப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர்.
காயல்பட்டினத்தில் 10 செ.மீ., மழை:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 69, காயல்பட்டினம் 108, குலசேகரன்பட்டினம் 55, விளாத்திகுளம் 33, காடல்குடி 14, வைப்பார் 63, சூரன்குடி 33, கோவில்பட்டி 35, கழுகுமலை 14, கயத்தாறு 47, கடம்பூர் 62, ஓட்டப்பிடாரம் 61, மணியாச்சி 48.4, வேடநத்தம் 35, கீழ அரசடி 21.7, எட்டயபுரம் 37, சாத்தான்குளம் 44, ஸ்ரீவைகுண்டம் 65.2, தூத்துக்குடி 89.3 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 108 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 49.19 மி.மீ. மழை பெய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT