Published : 05 Dec 2020 04:30 PM
Last Updated : 05 Dec 2020 04:30 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் புரெவி புயல் பாதிப்பு இல்லாத நிலையில் மிதமான சாரலுடன் குளிரான தட்பவெப்பம் நிலவியது. பேச்சிப்பாறைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
புரெவி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரிடர் மீட்பு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அனைத்துத்துறை அலுவலர்கள், போலீஸார், மத்திய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக கன்னியாகுமரி முதல் நீரோடி வரை கடற்கரை கிராமங்கள் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. மீனவர்கள் இன்று 7வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்றும் கன்னியாகுமரி கடல் உள்வாங்கியது. புயல் பாதிப்பு இல்லாத நிலையிலும் இன்று
கடற்கரை கிராமங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
அதே நேரம் மாவட்டம் முழுவதும் சாரலுடன் கூடிய மிதமான மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் குமரியில் குளிரான தட்பவெப்பம் நிலவியது. புயல் பாதிப்பு இல்லாததால் அரசுத்துறையினர், மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
அதிகபட்சமாக சிவலோகத்தில் (சிற்றாறு 2) 26 மிமீ., மழை பெய்திருந்தது. சிற்றாறு ஒன்றில் 22, அடையாமடையில் 23 மிமீ., மழை பதிவானது. குமரி மாவட்டத்தில் அணைகள் அனைத்தையும் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் சாரலால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 703 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வந்தது. இதைத்தொடர்ந்து இன்று அணை திறக்கப்பட்டு விநாடிக்கு 315 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டம் 44.37 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியாக உள்ளது. புரவி புயல் பாதிப்பு இல்லாத நிலையிலும் கடலோரம், மற்றும் மலையடிவார பகுதிகளில் போலீஸார், தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT