Published : 05 Dec 2020 12:56 PM
Last Updated : 05 Dec 2020 12:56 PM
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்தப்போராட்டத்தை ஆதரித்து திமுக சார்பில் மாநிலம் முழுவதும் கருப்புக்கொடி போராட்டம் நடந்தது. சேலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் தமிழகம் முழுவதும் டிச.5 அன்று திமுக சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி திமுக முன்னணி தலைவர்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் இன்று காலையில் கருப்புக்கொடி போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சேலத்தில் பங்கேற்றார், வேலூரில் பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்றார்.
மயிலாடுதுறையில் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலும், திருச்சியில் கே.என்.நேரு தலைமையிலும், திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமி தலைமையிலும், திருவண்ணாமலையில் பொன்முடி தலைமையிலும், ஈரோட்டில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையிலும், நீலகிரியில் ஆ.ராசா தலைமையிலும், நாமக்கல்லில் அந்தியூர் செல்வராஜ் தலைமையிலும், சென்னையில் மா.சுப்ரமணியம் உள்ளிட்ட முன்னணியினர் தலைமையிலும், மற்ற மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் மாநில நிர்வாகிகள் தலைமையிலும் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்தது.
கூட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்துக்கொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் சேலத்தில் கலந்துக்கொண்டார். சேலத்தில் இன்று காலை சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில், கந்தாஸ்ரமம் அடுத்துள்ள எஸ்ஆர்பி மைதானத்தில் நடந்த போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.
கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்புக் கொடி ஏந்தி, மத்திய அரசின் புதிய வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துக்கொண்ட இந்த கூட்டத்தில் முதலில் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை நீக்கக்கோரி முழக்கமும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து உரையாற்றினார்.
போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு வந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, சேலம் மாவட்ட எல்லையான சங்ககிரி பகுதியில் சேலம் மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
போராட்டத்துக்கான ஏற்பாடுகளை சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர், ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்,ஆர், சிவலிங்கம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
சேலத்தில் திமுக போராட்டத்தை ஒட்டி முன்னெச்சரிக்கையாக போராட்டத்துக்கு வந்த திமுகவினரை ஆங்காங்கே வழியில் மடக்கி போலீஸார் கைது செய்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
“அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்டச் செயலாளர்கள் முன்னெடுப்பில் ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் பங்கேற்புடன் விவசாயிகளின் உரிமை காக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெற்றி காணட்டும்! விவசாயி வேடம் போட்டு, பசுமை தழைக்கத் தடைபோடும் ஆட்சியாளர்களின் வேடத்தைக் கலைத்திட, கருப்புக் கொடிகள் உயரட்டும்! தமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும்! டெல்லி போல குலுங்கட்டும் தமிழகம்".
என ஏற்கெனவே ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT