Published : 05 Dec 2020 10:54 AM
Last Updated : 05 Dec 2020 10:54 AM

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்துதல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்

வைகோ: கோப்புப்படம்

சென்னை

மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (டிச. 05) காலை, அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1

மத்திய பாஜக அரசு இந்திய விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், இத்திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3

எக்காரணத்தை முன்னிட்டும் காவிரி வடிநிலப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயுத் திட்டங்களுக்கும் தமிழக அரசு அனுமதி அளிக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4

தமிழ்நாட்டில் கடந்த 2020, நவம்பர் 25-ம் தேதி வீசிய நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பயிர்கள் சேதம் மற்றும் வீடுகள், கால்நடைகள் சேதம் குறித்து முழு வீச்சில் ஆய்வு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் மக்களுக்கும் இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

அதேபோன்று, டிசம்பர் 1-ம் தேதி உருவான புரெவி புயலாலும் கனமழையாலும் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு இழப்புத் தொகை அளிக்க வேண்டும். பயிர்க் காப்பீடு செய்ய முடியாமல், கரோனா பேரிடர் காலத்தில் துயரப்படும் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். வாழ்வாதாரங்களைப் பறிகொடுத்துள்ள மீனவ மக்களுக்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5

இனியும் தாமதிக்காமல் தமிழக ஆளுநர் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு ஏழு தமிழர்களை விடுதலை செய்வதற்கு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6

தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதிமுக அரசு அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால் அதன் எல்லாத் துறைகளிலும் எங்கும் ஊழல்; எதிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது.

பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற முக்கியத் துறைகளில் ஒப்பந்தப் பணிகள் வழங்குவதில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் ஒட்டுமொத்த வேலைகளும் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே 'பேக்கேஜ்' முறையில் வழங்கப்பட்டு ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. உள்ளாட்சித் துறையில் நடைபெறும் ஊழல் நீதிமன்றம் வரையில் சென்றிருக்கிறது.

போக்குவரத்துத் துறையில் அடுக்கடுக்காக நடைபெறும் ஊழல்கள் சந்தி சிரிக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேக வாகனங்களின் பதிவு எண்களைக் கண்காணிக்க கேமரா பொருத்துவதற்கு விடப்பட்ட டெண்டரில் ஊழல், முறைகேடுகள் அரங்கேறி இருப்பதால் ரூ.900 கோடி ஊழல் டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ கடந்த நவம்பர் 20-ம் நாள் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தி இருந்தார்.

தற்போது போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு எஃப்.சி-க்குச் செல்லும் வாகனங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடமிருந்துதான் ஒளிரும் பட்டை, வேகக்கட்டுப்பாட்டுக் கருவி, ஜிபிஎஸ் கருவி போன்றவற்றை வாங்கிப் பொருத்த வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. இது குறிப்பிட்ட நிறுவனத்தின் வளர்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள முறைகேடு, ஊழல் என்று அப்பட்டமாகத் தெரிகிறது.

மோட்டார் வாகனச் சட்டப்படி வாகனத்திற்கு எஃப்.சி செய்வதை ஆய்வு செய்து தகுதிச் சான்று வழங்குவது மோட்டார் வாகன அதிகாரியின் கடமையாகும். இதிலும் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களின் மூலம் தான் எஃப்.சி செய்து வாகனங்களுக்குச் சான்று அளிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அத்தனியார் நிறுவனங்களிடம் எஃப்.சி செய்து அவர்கள் தரும் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டுதான் மோட்டார் வாகன அதிகாரி வாகனங்களுக்கு எஃப்.சி சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.

சுற்றறிக்கை விடுத்து, வெளிப்படையாகவே ஊழலில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும், ஊழலில் ஊறித் திளைக்கும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 7

பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு 17-ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்களால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் மொத்த உற்பத்தியில் 20 விழுக்காடு நைஜீரியாவில் உற்பத்தியாகிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில் குறிப்பாக கேரளம், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. கேரளாவில் அதிகப் பரப்பளவில் பயிரிடப்பட்டாலும் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதற்குக் காரணம் தமிழகத்தில் மரவள்ளியின் உற்பத்தித் திறன் அதிகமாகும்.

தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கரூர், சேலம், தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பெருமளவு பயிரிடப்பட்டு வருகிறது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பயிர் என்பதால் இந்த மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.

மரவள்ளிக் கிழங்கிலிருந்து ஜவ்வரிசி போன்ற உணவுப் பொருள்களும், கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் நாமக்கல், சேலம், ஈரோடு பகுதிகளில், ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தி ஆலைகள் 400-க்கும் மேற்பட்டவை இயங்கி வந்தன. தற்போது மரவள்ளிக் கிழங்குக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் உற்பத்தியைக் குறைத்து விட்டனர். இதனால் மேற்கண்ட ஆலைகள் இயங்க முடியாமல் 200 ஆகக் குறைந்து விட்டன.

கடந்த வாரத்தில் மரவள்ளிக் கிழங்கின் விலை ஒரு டன் ரூ.7,500-க்கு விற்பனை ஆனது. ஆனால், இந்த வாரம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் முகவர்கள் ரூ.4,500 மட்டுமே தீர்மானித்துள்ளனர். இதனால் உரிய விலை கிடைக்காமல் மரவள்ளிக் கிழங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தமிழக அரசே குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து மரவள்ளிக் கிழங்கை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதைப் போலவே விவசாயிகள் உற்பத்தி செய்கிற வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காததால் உற்பத்தி அதிகமாகும்போது ஏஜெண்டுகள் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் வியர்வை சிந்தி, கடன்பட்டு, இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டு சாகுபடி செய்த உணவுப் பயிர்களை சாலைகளில் கொட்டும் அவலம் தொடர்கின்றது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு உள்ளிட்ட விளைபொருட்கள் அனைத்துக்கும் உற்பத்திச் செலவை ஈடுகட்டும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தபடி உற்பத்திச் செலவோடு மேலும் 50 விழுக்காடு சேர்த்து விளைபொருட்களுக்கு கொள்முதல் விலையைத் தீர்மானிக்க வேண்டும் என்று இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x