Published : 05 Dec 2020 03:16 AM
Last Updated : 05 Dec 2020 03:16 AM
வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் ஏரியின் பிரதான வடிகால் மதகான வெள்ளியங்கால் ஓடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் 20 கிராமங்களில் வெள்ள நீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் வீராணம் ஏரி ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இதன் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இதன் மூலம் இப்பகுதி விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
‘நிவர்’ புயலைத் தொடர்ந்து, ‘புரெவி’ புயல் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளான மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், அரியலூர், ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் கீழணையில் இருந்து ஏரிக்கு அனுப்பப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கருவாட்டு ஓடை வழியாக விநாடிக்கு 2ஆயிரம் கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும், பல்வேறு காட்டாறு மூலம் ஏரிக்கு விநாடிக்கு 3ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 46.30 அடி உள்ளது.
இந்த நிலையில் ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீரணம் ஏரியின் பிரதான மதகான வெள்ளியங்கால் ஓடை வழியாக விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியும், விஎன்எஸ்எஸ் வடிகால் மதகு வழியாக வெள்ளாற்றில் விநாடிக்கு 1,450 கன அடி தண்ணீரையும் வெளியேற்றி வருகின்றனர். சென்னைக்கு விநாடிக்கு 69 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஏரியின் பிரதான வடிகால் மதகான வெள்ளியாங்கால் ஓடை திறக்கப்பட்டதால் திருநாரையூர், சர்வராஜன்பேட்டை, எள்ளேரி கிழக்கு, நத்திமங்கலம், கீழவன்னீயூர்,கீழக்கரை, நடுதிட்டு உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு வெள்ள அபயாம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் நீரில் முழ்கின.
இப்பகுதிகளை வருவாய்துறையினர் பார்வையிட்டு வெள்ள தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருன்றனர். சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர்கள் சிதம்பரம் பாலமுருகன், அணைக்கரை அருணகிரி மற்றும் உதவி பொறியாளர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் கொண்ட குழுவினர் வீராணம் ஏரி கரைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT