Published : 04 Dec 2020 05:40 PM
Last Updated : 04 Dec 2020 05:40 PM
புதுச்சேரியில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான இடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் புதுச்சேரியில் கரையைக் கடந்த நிலையில் காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஒரே நாளில் 30 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பல ஏக்கர் விளைநிலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டன.
தற்போது புரெவி புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த 2-ம் தேதி முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையால் தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, நகரப் பகுதியில் கிருஷ்ணா நகர், பாவாணர் நகர், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. சாலைகள் தண்ணீரில் மூழ்கின.
புஸ்சி வீதி சின்ன மணிக்கூண்டு குபேர் அங்காடியில் மழைநீர் சூழ்ந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. உழவர்கரை நகராட்சி மூலம் குண்டுசாலை பகுதியில் ஒரு மின்மோட்டார், வெங்கட்டா நகர் செல்வநாதன் திருமண மண்டபம் பகுதியில் 3 மின்மோட்டார் மூலம் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல், புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் நெல்லித்தோப்பு, லெனின் வீதி மணிமேகலை அரசுப் பள்ளி எதிரிலும், ரெயின்போ நகர் 8-வது குறுக்குத் தெரு, வசந்தம் நகர், கிருஷ்ணா நகர் முதல் தெரு, ஆம்பூர் சாலை உள்ளிட்ட 8 இடங்களிலும் மின்மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், வழுதாவூர், முத்திரையர்பாளையம் சந்திப்பு, உப்பளம் அம்பேத்கர் சாலை கல்லறை அருகில், லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு, செஞ்சி சாலை ஆகிய இடங்களில் 5 மரங்கள் விழுந்துள்ளன. இவற்றைப் பொதுப்பணித்துறை ஊழியர்கள் வெட்டி அகற்றினர். இதேபோல், கிராமப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பாகூர், நெட்டப்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே சூழ்ந்துள்ளது.
பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவக் கல்லூரி எதிரில் கடலூர்-புதுச்சேரி பிரதான சாலை மூழ்கடித்தபடி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் தண்ணீரில் மிதந்தபடி சென்று வருகின்றன. அதோடு பாகூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வாழை, மரவள்ளி போன்ற விளைநிலங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
ஆங்காங்கே உள்ள வடிகால் வாய்க்கால் தண்ணீர் அதிகரிப்பால் உடைந்துள்ளன. குறிப்பாக, கன்னியக்கோயில்-பாகூர் சாலையோரம் உள்ள வடிகால் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு அங்குள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து வருகிறது. பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் கிருமாம்பாக்கம், பாகூர் தாமரைக்குளம், பிள்ளையார்குப்பம், கன்னியக்கோயில், மதிகிருஷ்ணாபுரம், பரிக்கல்பட்டு, சோரியாங்குப்பம் உள்ளிட்ட 10 இடங்களிலும், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட 2 இடங்களிலும் மின்மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், தொடர் கனமழையால் புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரிக்கரையில் ஈரப்பதம் மிகுந்துள்ளதால், பன்றிகள் ஏரிக்கரையின் ஒரு பகுதியில் பள்ளம் பறித்து வைத்துள்ளன. இதுனால் அந்தப் பள்ளங்கள் பொதுப்பணித்துறை நீர்பாசனப் பிரிவு சார்பில் மண் மூட்டைகள் அடுக்கி மூடப்பட்டுள்ளன.
ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த கனமழையால் பாகூர், கிருமாம்பாக்கம், பரிக்கல்பட்டு, மடுகரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 17 வீடுகளும், காலாப்பட்டு பகுதியில் 2 வீடுகளும் மழையால் சேதமடைந்துள்ளதாகவும், இது தொடர்பாக கணக்கெடுத்து வருவதாகவும் வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து கனமழை காரணமாக மீனவர்கள் இன்றும் (டிச.4) மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடற்கரை ஒட்டிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதைக் காவல்துறை ஆங்காங்கே கண்காணித்து, தடுத்து, எச்சரித்து வருகின்றனர். 200க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை (டிச. 5) புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT