Published : 04 Dec 2020 03:46 PM
Last Updated : 04 Dec 2020 03:46 PM
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைத் தரம் குறைப்பதா என, மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தொல். திருமாவளவன் இன்று (டிச. 04) வெளியிட்ட அறிக்கை:
"சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மைசூரில் உள்ள 'இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின்' ஒரு துறையாக மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது செம்மொழித் தமிழை அவமதிப்பது மட்டுமின்றித் தமிழ்நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமும் ஆகும். இந்த முடிவைக் கைவிடவேண்டுமென்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மத்திய பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்த வேண்டுமென்றும் மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
மைசூருவில் இருக்கும் இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்தை மத்திய பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப் போவதாகவும் அதில் ஒரு துறையாக சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சேர்க்க இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. செம்மொழி தமிழுக்கு செய்யப்படும் மிகப்பெரிய அவமதிப்பாகும்.
கடந்த ஆண்டு ஒரே நாளில் சமஸ்கிருதத்துக்கு என மூன்று முக்கிய பல்கலைக்கழகங்களை 2019 டிசம்பரில் பாஜக அரசு அமைத்தது. சமஸ்கிருதத்திற்கு முன்பே செம்மொழித் தகுதி பெற்ற தமிழின் வளர்ச்சிக்கென இதுவரை எதையும் அது செய்யவில்லை.
அதற்கு மாறாக, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சென்னையில் அமைக்கப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இப்போது மைசூருவில் செயல்பட்டுவரும் இந்திய மொழிகளின் மத்திய மையத்தின் ஒரு துறையாக மாற்றுவதற்கு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக செம்மொழி நிறுவனத்தை மாற்றுவதற்கு முயற்சித்தார்கள். கடுமையான எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக அந்த முயற்சியைக் கைவிட்டார்கள். இப்போது மைசூரிலுள்ள நிறுவனத்தின் துறையாக செம்மொழி நிறுவனத்தை மாற்றுவதென்பது தமிழுக்கு செய்யப்படும் அவமதிப்பு மட்டுமன்றித் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் இன்னொரு துரோகமும் ஆகும். இந்தத் தமிழ்விரோத முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை சீர்குலைக்கும் மத்திய அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமன்றி, சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சமஸ்கிருத மொழிக்கு செய்ததைப் போல ஒரு மத்திய பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்".
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT