Published : 04 Dec 2020 02:14 PM
Last Updated : 04 Dec 2020 02:14 PM

அரசு மருத்துவர்களுக்கான ஊதிய விஷயத்தில் தமிழகம்தான் கடைசி இடம்: உரிய ஊதியம் வழங்க கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

இனியும் தாமதிக்காமல் அரசு மருத்துவர்களுக்கான உரிய ஊதியத்தைத் தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (டிச. 04) வெளியிட்ட அறிக்கை:

"சுகாதாரச் செயல்பாடுகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீண் தம்பட்டம் அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆனால், அரசு மருத்துவர்களுக்கான ஊதிய விஷயத்தில் தமிழகம்தான் கடைசியாக இருக்கிறது என்ற உண்மையை மறைக்க முடியுமா?

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதற்கு நம் மருத்துவர்களின் பங்கைக் குறைத்து மதிப்பிட முடியுமா? அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய அளவுக்கு மருத்துவத் துறை சிறந்து விளங்குவதற்கு நம் மருத்துவர்கள்தானே காரணம்.

சுகாதாரத்துறை செயல்பாடுகளில் நாட்டிலேயே 25-வது இடத்தில் இருக்கும் பிஹார் உள்ளிட்ட பல மாநிலங்களில் கூட அரசு மருத்துவர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், சுகாதாரத்துறையில் முன்னணி மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது என்று மார்தட்டிக் கொள்கிற தமிழகத்தில் மருத்துவர்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படுவது வேதனையாக உள்ளது.

கர்நாடகாவில், சமீபத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்துவதற்கு முன்பே, ஊதியக் கோரிக்கையை அரசு நிறைவேற்றியுள்ளது, ஆனால், தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடியும், கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்த பிறகும், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.

பல மாநிலங்களில் கிராமங்களில் அரசு மருத்துவர் இருப்பதையே உறுதி செய்ய முடியாத நிலையில், தமிழகத்தைக் கிராமப்புறச் சுகாதாரச் சேவையில் முன்னணி மாநிலமாக, நிலைநிறுத்தி வரும் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை அரசு தர மறுப்பது நியாயமா?

தமிழக அரசு மருத்துவர்களுக்கு, உரிய ஊதியம் தரப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றமும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் பலமுறை தெரிவித்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் தமிழக அரசு உள்ளது.

கரோனா, டெங்கு போன்று எத்தனை சவால்கள் வந்தாலும், தமிழகத்தில் உள்ள 18 ஆயிரம் மருத்துவர்கள்தான் போராடி வருகின்றனர். மருத்துவர்களின் உழைப்பை மட்டும் பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?

அரசு மருத்துவர்களுக்குத் தரப்படும் ஊதியம் என்பது, மக்களுக்கான, சுகாதாரத்துக்கான முதலீடு என்பதையும், அது செலவினம் அல்ல என்பதையும் அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றினால், மருத்துவர்கள் இன்னும் உற்சாகமாகப் பணியாற்றவும், சுகாதாரத்துறையை இன்னும் சிறப்பாக அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவும் முடியும்.

இன்றைய காலகட்டத்தில், உயிரையும் துச்சமென நினைத்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்பதே, ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆசையாக இருக்கிறது.

எனவே, 18 ஆயிரம் மருத்துவர்கள் இல்லாமல் சுகாதாரத்துறையை முன்னேற்றியிருக்க முடியுமா? என்பதைச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மனசாட்சியுடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உயிர் காக்கும் மகத்தான பணியில் உள்ள மருத்துவர்கள் மன உளைச்சலுடன் எப்படிப் பணியாற்ற முடியும்? எனவே, இனியும் தாமதிக்காமல் மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தைத் தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x