Published : 04 Dec 2020 12:25 PM
Last Updated : 04 Dec 2020 12:25 PM
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு, கரும்புக் குருத்து வெட்டும் கருவிக்காக 20 ஆண்டுகளுக்குக் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ள குமுளூர் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், பண்ணை இயந்திரவியல் மற்றும் ஆற்றல் துறை உதவிப் பேராசிரியர் ப.காமராஜ், பேராசிரியர் அ. தாஜூதீன் ஆகியோர் கரும்பு தாய்க் குருத்து வெட்டும் கருவியை உருவாக்கினர். அதற்கான காப்புரிமை விண்ணப்பம் கடந்த 2013-ல் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இக்கருவிக்கான காப்புரிமையை 2013-ம் ஆண்டு முதல் 2033-ம் வரை என 20 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு அளித்து இந்தியாவின் அறிவுசார் சொத்து அலுவலகம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''கரும்பு சாகுபடியில், நீடித்த நிலையான கரும்பு சாகுபடித் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன்படி கரும்பு நாற்று நடவு செய்த 30-ம் நாள், தாய்க் குருத்தை 1 அங்குலம் வெட்டி விட வேண்டும். இதற்குக் கரும்பு விவசாயிகள் கத்தரிக்கோல், கத்தி, அரிவாள் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றைக் கொண்டு குனிந்துகொண்டே வேலை செய்வதால், முதுகுவலி வருவது மட்டுமல்லாமல், கூர்மையான முனை கைகளுக்கும், கரும்புத் தோகையின் கூர்முனை கண்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மேலும் குறைந்த எண்ணிக்கையிலான கரும்பு தாய்க் குருத்துகளை வெட்டுவதற்கு அதிக நேரமும் செலவாகிறது. இதைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இக்கருவியானது பிரதான குழாய் கத்தரிக்கோல், இயக்கக் கம்பி மற்றும் கைப்பிடி போன்ற பாகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கருவியின் எடை ஒரு கிலோவிற்கும் குறைவாக இருப்பதனால், பெண் விவசாயிகளும் மிக எளிதாகக் கையாண்டு, கரும்பு தாய்க் குருத்தை வெட்ட முடியும். ஒரு மணி நேரத்தில் 800க்கும் மேற்பட்ட கரும்பு தாய்க் குருத்துகளை வெட்டலாம்.
இதனால் விளைகின்ற கரும்புகள் ஒரே சீராகவும், பருமனாகவும் அதிக எண்ணிக்கையிலும் இருக்கும். இக்கருவியைப் பயன்படுத்துவதால் 50 சதவீதம், நேரம் மற்றும் செலவைக் குறைக்க முடியும்''.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT