Published : 04 Dec 2020 03:17 AM
Last Updated : 04 Dec 2020 03:17 AM
சந்தவாசல் அருகே உயிரிழந்தவர் உடலை கிராம மக்கள் ஆற்று வெள்ளத்தில் சுமந்து சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த படைவீடு ஊராட்சி கமண்டலாபுரம் கிராமத்தில் வசித்த முதியவர் சேட்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. அந்த கிராமம் வழியாக செல்லும் கமண்டல நதியை கடந்துதான் மயானத்துக்கு செல்ல வேண்டும். மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் செல்வதால், கழுத்தளவுக்கு ஓடிய தண்ணீரில் சேட்டு உடலை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமந்து சென்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, “கமண்டலாபுரம் கிராமத்தில் நடுவே நாகநதி ஓடுகிறது. இதனால், நதியை கடந்துதான் மயானத்துக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் மழை காலத்தில், தண்ணீர் ஓடும்போது பாதிக்கப்படுகிறோம். நாகநதியின் குறுக்கே பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
உடலை சுமந்து செல்லும்போது வெள்ளம் திடீரென அதிகரித்தால், அனைவரது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்து, பாலம் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT