Published : 03 Dec 2020 08:36 PM
Last Updated : 03 Dec 2020 08:36 PM
புரெவி புயலின் வேகத்திற்கு ஏற்ப மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புரெவி புயல் முன்னெச்செரிக்கை நடவடிக்கை குறித்து வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் இன்றுஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவிக்கையில்; புரெவி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலைகொண்டிருப்பதை கூர்ந்து கவனித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும், கட்டுப்பாட்டு அறையின் மூலம் மாவட்ட நிர்வாகமும், மாநில அவசர கட்டுப்பாட்டு அறையும் தயார் நிலையில் உள்ளது.
கடந்த ஒரு வாரமாக ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைதிரும்ப வேண்டும் எனவும், யாரும் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்து அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி அனைத்து மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் பாதுகாப்பான பகுதியில் கரைஒதுங்க வேண்டும் என வலியுறுத்தி அதை செயல்படுத்தப்பட்டு வருகிறது. புரெவி புயலின் வீரியம் குறித்தும் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் 90 கிலோ மீட்டர் வேகம் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் பகுதியில் புரெவி புயல் கடந்து, தற்போது பாம்பன், கன்னியாகுமரி இடையே கடக்கக்கூடும் என்ற அறிகுறியின் பேரில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுவாக புயல் ஒரே இடத்தில் கடக்கும் என்றால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறையும். ஆனால் கஜா புயல் போன்று புரெவி புயலும் வலுவுடன் இருக்கும் காரணத்தால் மழைப்பொழிவு, காற்று அதன் வேகத்திற்கு ஏற்ப மீட்பு நடவடிக்கையை எடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் இருந்து தேவைப்படும் கடற்படை, விமானப்படை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதாக தமிழக முதல்வர் பழனிச்சாமியிடம், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகமாகும்போது உபரிநீரை வெளியேற்றுவதற்கான நிலைப்பாடுகளை பொதுப்பணித்துறை வாயிலாக கண்காணிக்கப்பட்டு மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
புயல் நாளைக்குள் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அனைத்து அலுவலர்களும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள். எனவே பொதுமக்களும், மீனவர்களும் அச்சப்பட வேண்டாம்.
தாழ்வான பகுதிகள், மற்றும் கடற்கரையோர பகுதிகளில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. புரெவி புயலால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளரும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு மேலாண்மை இயக்குனருமான ஜோதி நிர்மலாசாமி, மீன்வளத்துறை இயக்குனர் ஜெயகாந்தன், குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், எஸ்.பி. பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT