Last Updated : 03 Dec, 2020 08:00 PM

1  

Published : 03 Dec 2020 08:00 PM
Last Updated : 03 Dec 2020 08:00 PM

கட்சிகளின் தேவைக்கு ஏற்ப மாவட்டங்கள் பிரிக்கப்படுவது சரியல்ல: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

மக்கள் நலனுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் மாவட்டங்கள் பிரிக்கப்படுவது நல்லது. அதே நேரத்தில் கட்சிகளின் தேவைக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிப்பது சரியல்ல என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டம் பவூர்சத்திரத்தை சேர்ந்த ராஜேந்திரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தென்காசியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.119 கோடி ஒதுக்கியுள்ளது. தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அருகே ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 30 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடம் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கு போதுமானது.

இந்நிலையில் இங்கு 11 ஏக்கரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சுத்திகரிப்பு நிலையம் ஆகியன அமைக்கப்படுகிறது.

இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிரமங்கள் ஏற்படும். சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும். எனவே தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அருகே ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை விதித்து, அந்த இடத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்ட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டினால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படும். ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டங்கள் நடைபெற்றால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்படுவர் என்றார்.

அப்போது நீதிபதிகள், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிர்வாக மேம்பாட்டுக்காக மாவட்டங்களை பிரிப்பது நல்லது. அதில் ஒற்றுமை தேவை. கட்சிகள் தங்களின் தேவைக்கு ஏற்ப மாவட்டங்கள் பிரிக்கப்படுகிறது.

இது ஏற்கத்தக்கது அல்ல. முந்தைய அரசிலும், தற்போதைய அரசிலும் அப்படியே நடக்கிறது என்றனர். பின்னர் தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x