Published : 03 Dec 2020 07:53 PM
Last Updated : 03 Dec 2020 07:53 PM
வேளாண் திருத்தச் சட்ட மசோதாவால் விவசாயிகள் நன்மையே அடைகின்றனர் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம், பயணியர் ஆய்வு மாளிகையில் செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி இன்று கூறியது:
’’தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு அப்போது துணை முதல்வராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், அந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார். திமுக மீத்தேன் எடுக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. அதிமுக அத்திட்டத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது. டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிமுக அறிவித்துள்ளது. காவிரி நதிநீப்ர் பிரச்சினைக்கு அதிமுக அரசே தீர்வு கண்டது.
திமுக ஆட்சியில் கபினி, ஹேமாவதி அணை கட்டப்பட்ட போது, சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி, அந்த மாநிலத்தில், அவர்கள் அணை கட்டுகிறார்கள் என்று தெரிவித்தார். தற்போது நீர் மேலாண்மையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகத் தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கல்வி, வேளாண்மை, சுகாதாரம் எனப் பல்வேறு துறைகளில் சிறந்த மாநிலமாகத் தமிழகம் விருது பெற்றுள்ளது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டி வருகிறார். ஸ்டாலின் மக்களை நேரில் சந்திக்காமல், அறைக்குள் அமர்ந்து கொண்டு, காணொலிக் காட்சி மூலம் கட்சி நிர்வாகிகளிடம் அதிமுக அரசு மீது வீண்பழி சுமத்தி வருகிறார்.
வேளாண் சட்டத் திருத்த மசோதாவால் விவசாயிகள் நன்மையே அடைகின்றனர். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தம் போட்டுவிட்டால், விளைபொருள் விலை வீழ்ச்சி அடைந்தாலும், ஒப்பந்த விலையையே நிறுவனங்கள் அளித்தாக வேண்டும். அதேபோல, இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக நிறுவனமும், விவசாயிகளும் வர்த்தகத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் உள்பட விவசாயிகளுக்கு வேளாண் சட்டத் திருத்த மசோதா மூலம் நன்மையே உள்ளது. இதுசம்பந்தமாக விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை செய்தபோது, தமிழகத்தில் விவசாயிகள் எங்கும் பாதிப்படையவில்லை என்றே கருத்துத் தெரிவித்துள்ளனர்.
விளைபொருட்களைப் பதுக்கினால், மத்திய அரசு பஞ்சம், போர் , வறட்சிக் காலங்களில் அமல்படுத்தும் சட்டத்தை அமல்படுத்தும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் வேளாண் திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்துப் போராடி வருகின்றனர் என்றால், தமிழகத்தில் எந்த விவசாயியும் பாதிக்கப்படவில்லை என்பதைத்தான் என்னால் கூற முடியும். திமுக தலைவர் ஸ்டாலினைப் போல, எனக்கு அகில இந்திய அளவிலான அரசியலில் ஈடுபட தெரியாது. இதற்குப் பாஜகவினர் விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில், நான் உங்களிடம் விளக்கிக் கொண்டிருக்கிறன்.
பாஜக நண்பர்கள் இதுசம்பந்தமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாமகவினர் 20 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டி அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு என்று தனிக்கொள்கை உள்ளது. அவர்களுக்கான கொள்கையை முன்வைத்து உரிமைக்காகப் போராடுகின்றனர். எங்களுடனான கூட்டணி என்பது வேறு.
ரஜினி அரசியல் பிரவேசம்
ரஜினிகாந்த் வரும் ஜனவரியில் அரசியல் கட்சி ஆரம்பித்து, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முழுமையான தகவல் எனக்கு வந்து சேரவில்லை. இப்போதுதான் அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவரின் விரிவான அறிக்கை மற்றும் பேட்டிகளைக் கொண்டே தெளிவாக பதில் அளிக்க முடியும்.’’
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT