Published : 03 Dec 2020 07:30 PM
Last Updated : 03 Dec 2020 07:30 PM
புதுச்சேரி பாகூர் பகுதியில் கழுதை மேய்க்கும் நாடோடிகளுக்குத் தங்க இடம் மறுக்கப்பட்டதால் கொட்டும் மழையில் குழந்தைகளுடன் அவர்கள் பரிதவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அரியலூர் மாவட்டம் சன்னாசி நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முரளி மற்றும் பச்சமுத்து ஆகியோர் தங்களது குடும்பத்துடன் 15-க்கும் மேற்பட்ட கழுதைகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் ஊர் ஊராகச் சென்று கழுதைகளை மேய்ப்பதோடு, கழுதைப் பால் விற்பனை செய்து, அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் இரவு நேரத்தில் அங்கு உள்ள அரசுப் பள்ளியில் தங்கிவிட்டு காலையில் அவர்கள் பிழைப்பைத் தேடிச் சென்று விடுவது வழக்கம். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு முரளி மற்றும் அவர்களது குடும்பத்தினர் கழுதைகளை ஓட்டிக்கொண்டு கால்நடையாகப் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.
புதுச்சேரியின் பல பகுதிகளுக்குச் சென்று கழுதைப் பால் விற்பனை செய்த இவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி அடுத்துள்ள பாகூர் பகுதிக்கு வந்துள்ளனர். இவர்கள் பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே மரத்தடியில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களாகப் புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தங்க இடமின்றித் தவித்துள்ளனர்.
பின்னர் நேற்று இரவு எதிரே உள்ள அரசுப்பள்ளியில் குழந்தைகளுடன் தஞ்சமடைந்துள்ளனர். இன்று (டிச.3) காலை அவர்களைக் கண்ட பள்ளி ஊழியர்கள் அங்கு தங்குவதற்கு அனுமதி மறுத்ததோடு அவர்களை விரட்டியடித்துள்ளனர். இதனால் பரிதவித்த முரளி கொட்டும் மழையிலும் உறவினர்கள், குழந்தைகளுடன் நனைந்தபடியே அங்கு உள்ள பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தார்.
இதனைக் கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள், அவர்களின் பரிதாப நிலையைக் கண்டு உணவு மற்றும் அரிசி, காய்கறிகளை வாங்கி கொடுத்துள்ளார். இதுபற்றித் தகவல் அறிந்தவுடன் பாகூர் வட்டாட்சியர் குமரன் முரளி, அவரது குடும்பத்தினர் மற்றும் கழுதைகளை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தங்க வைக்கவும், அவர்களுக்குத் தேவையான உணவு வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT