Published : 03 Dec 2020 05:46 PM
Last Updated : 03 Dec 2020 05:46 PM
கரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனைக்கு புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.
இப்பரிசோதனையானது மகாத்மா காந்தி மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் பழனிவேல் மற்றும் பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் லோகேஷ் தலைமையில் நடத்தப்பட உள்ளது. இந்த மூன்றாம் கட்ட ஆராய்ச்சிக்கு ஆர்வமுள்ள சுகாதாரப் பணியாளர், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் அனைவரும் பெயர்களைப் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை தொடர்பாக நுரையீரல் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் பழனிவேல் கூறுகையில், "இந்தியாவில் மொத்தம் தேர்வான 21 மையங்களில் இக்கல்லூரியும் ஒன்றாகும். கரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்டக் களப் பரிசோதனையானது இந்தியாவில் மொத்தம் 28 ஆயிரம் தன்னார்வலர்களிடம் நடத்தப்பட உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். இந்தத் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்தக் களப் பரிசோதனைக்கான அனுமதி, இந்திய மருத்துவக் கட்டுப்பாட்டாளரிடம் இருந்து மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரிக்குத் தரப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பைக் கண்டறிய மூன்றாம் கட்ட சோதனையானது புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 1,200 தன்னார்வர்லர்களிடம் நடத்தப்பட உள்ளது. இன்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்தத் தடுப்பூசி இரு முறை செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்தி 28 நாட்கள் கழித்து இரண்டாவது முறை செலுத்துவோம். தடுப்பூசி போட்டுக் கொண்டோரை ஓராண்டு கண்காணிப்போம்'' என்று குறிப்பிட்டார்.
முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவமனை பொது மேலாளர் ஆஷா கூறுகையில், "முன் உதாரணமாகத் தடுப்பூசி போட்டுள்ளேன். கரோனாவிலிருந்து மீள தடுப்பூசி அவசியம். தடுப்பூசி நடைமுறைக்கு வந்தால் முன்பு போல் அனைவரும் இருக்கலாம். இதனால் தைரியமாக முன்வந்து இதில் பங்கேற்றேன்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT