Published : 03 Dec 2020 05:04 PM
Last Updated : 03 Dec 2020 05:04 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் புரெவி புயலால் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் இன்று பகலில் சாரல் மழை அவ்வப்போது பெய்தது.
பாளையங்கோட்டையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2 மி.மீ., திருநெல்வேலியில் 1 மி.மீ., சேரன்மகாதேவியில் 0.60 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 0.50 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 124 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 822 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையிலிருந்து 882 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 123.95 அடியாக இருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 96.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 128 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 19 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 10.62 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 34.50 அடியாகவும் இருந்தது.
மாவட்டத்தில் பகல் முழுக்க வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயில் தலைகாட்டவில்லை. அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை:
திருநெல்வேலி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கையை அடுத்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக சிறப்பு அதிகாரி கருணாகரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் தாமிரபரணி ஆறு மற்றும் கால்வாய் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவுடன் சென்று இன்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பாளையங்கால்வாய் செல்லும் பகுதிகள், சிந்துபூந்துறை தாமிரபரணி ஆற்றங்கரை பகுகளில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் கருணாகரன் கூறியதாவது:
மழை, வெள்ளம் ஏற்பட்டால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
தற்போதுவரை தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் இல்லை. தற்போது பாபநாசம் அணையில் 80 சதவிகிதம், மணிமுத்தாறு அணையில் 60 சதவிகிதம் தண்ணீர் உள்ளது.
மழை பெய்தால் இந்த இரு அணைகளும் நிரம்பியபின் உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்படும். இது தொடர்பாக பொதுப்பணித்துறையிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டு வருகிறது. மேலும் எத்தனை குளங்கள் நிரம்பியிருக்கின்றன என்பது குறித்தும் கேட்கப்பட்டுள்ளது.
பாளையங்கால்வாயில் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் கடைமடை வரையில் செல்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கால்வாயில் தண்ணீர் வழிந்தோட முடியாமல் இருக்கும் அடைப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டிருக்கிறது.
சிந்துபூந்துறையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அப்பகுதியில் கால்நடைகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குளங்களுக்கு தண்ணீர் செல்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. தண்ணீர் செல்ல முடியாத நிலையில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அகற்றவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாஞ்சோலை மலைப்பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அங்கு மழை வெள்ளம் அதிகமிருந்தால் பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக அங்கு செல்லும் வகையில் அம்பாசமுத்திரத்தில் தயார் நிலையில் உள்ளனர் என்று தெரிவித்தார்.
அவருடன் மாநகராட்சி ஆணையர் கண்ணன், சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
கால்வாயில் குப்பைகள் அகற்றம்:
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் வேய்ந்தான்குளம் வரத்து கால்வாய்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. மேலப்பாளையம் மண்டலம் உதவி ஆணையாளர் சுகி பிரேமலதா, உதவி செயற் பொறியாளர் லெனின் ஆகியோர் பார்வையிட்டனர்.
உதவிப் பொறியாளர் சிவசுப்பிரமணியம், சுகாதார ஆய்வாளர் சங்கரலிங்கம், 27வது வார்டு நலச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ் நல்லபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.
காவல்துறை அறிவுறுத்தல்:
மழை நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலைகவசம் அணிந்து, மிதமான வேகத்தில் முகப்பு விளக்கை ஒளிரவைத்து செல்ல வேண்டும் என்று மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT