Published : 03 Dec 2020 04:27 PM
Last Updated : 03 Dec 2020 04:27 PM

குடியிருப்புகளுக்கு முன்பு இடப்பட்ட சாதிப் பெயர்கள் நீக்கம்: முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஸ்டாலின் பாராட்டு

சென்னை

ஜோதிராவ் புலே, சாகு மகராஜ், அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனைகளுக்குக் காலத்திற்கேற்ற செயல்வடிவம் தரும் வகையில், முற்போக்கான முடிவினை எடுத்துள்ளது முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசு என ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“பிறப்பினால் பேதம் கற்பிக்கும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை அகற்றி, சமூகநீதி அடிப்படையிலான சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடுவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாகும். 'பெரியார் மண்' என்ற பெருமை இதற்கு உண்டு. பெரியாருக்கு முன்பாக 'வள்ளலார்' ராமலிங்க அடிகளார் போன்றவர்களும், தங்கள் சீரிய சிந்தனைக் கலப்பையால் சமுதாயத்தை உழுது, மாற்றங்களை விதைத்தனர்.

இந்திய ஒன்றியத்தில் ஒரு சில மாநிலங்களே சமுதாயச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. அதில், மராட்டிய மாநிலத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. ஜோதிராவ் புலே, சாகு மகராஜ், அம்பேத்கர் என மாபெரும் சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனையாளர்களை வழங்கிய பெருமை மராட்டிய மண்ணிற்கு உண்டு. அவர்களின் சிந்தனைகளுக்குக் காலத்திற்கேற்ற செயல்வடிவம் தரும் வகையில், முற்போக்கான முடிவினை எடுத்துள்ளது முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசு.

மராட்டிய மாநிலம் முழுமையும் பிராமணர்கள் - மகர்கள் எனச் சாதி ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையிலான பெயர்களைத் தாங்கியுள்ள குடியிருப்புகள் அனைத்திற்கும் அப்பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய பெயர்கள் சூட்டப்படும் என உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். சாதிப் பெயர்களைக் கொண்ட மகர் வாதா, பிராமண் வாதா, மங் வாதா, தோர் வஸ்தி, பௌத் வாதா, மல்லி கல்லி போன்றவை ஒழிக்கப்படும் என்றும்; அவற்றுக்கு மாற்றாக சமதா நகர், பீம் நகர், ஜோதி நகர், சாகு நகர், கிராந்தி நகர் என்ற புதுமைப் பெயர்கள் சூட்டப்படும் எனவும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது. அம்பேத்கர் அவர்கள் பெயரில் வழங்கப்படும் விருதும், அம்பேத்கர் சமஜ் பூசண் விருது என வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாய சீர்திருத்தத்தில் முன்னோடி மாநிலமாகவும், பெரியாரின் சீரிய சிந்தனைகளால் பக்குவப்பட்ட மாநிலமாகவும் உள்ள தமிழகத்தில், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட யாரும் சாதிப் பெயர்களைக் கொண்டிருப்பதில்லை. தாங்கள் படித்துப் பெற்ற பட்டங்களையே தாங்கி நின்று, சமூகநீதியின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதுபோலவே, தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களும் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் நீக்கப்பட்டுவிட்டது.

சாதி ஏற்றத்தாழ்வின்றி அனைத்து மக்களும் சேர்ந்து இணக்கமாக வசிக்கக்கூடிய கனவுத் திட்டமான பெரியார் பெயரிலான ‘சமத்துவபுரம்’, தலைவர் கருணாநிதி ஆட்சியில் தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட்டு, இந்தியாவுக்கே வழிகாட்டும் மனிதநேயத்தின் மகத்தான மையங்களாயின. பல நூறு ஆண்டுகளாகப் பரவிப் புரையோடிப் போயிருக்கும் சாதிப் பாகுபாடுகளை - அதன் விளைவாக நேர்ந்த கொடுமைகளை - வன்மத்தை அகற்றிட, தொடர்ச்சியான செயல்பாடுகள் தேவை.

அனைத்து மாநிலங்களிலும் அவை பரவலாக முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில், மராட்டிய மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள, சாதிக் குடியிருப்புகளின் பெயர் மாற்ற முடிவினை, பெரியார் மண்ணிலிருந்து, கருணாநிதியின் உடன்பிறப்பாக இதயப்பூர்வமாக வரவேற்றுப் பாராட்டி மகிழ்கிறேன்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x