Published : 03 Dec 2020 04:22 PM
Last Updated : 03 Dec 2020 04:22 PM
மக்களிடம் பொய் வாக்குறுதிகளைக் கூறி, அறையில் அமர்ந்து அடுத்தவர் எழுதிக் கொடுப்பதை ஸ்டாலின் பேசுகிறார் என அவிநாசி சாலை உயர்மட்டப் பாலப் பணி தொடக்க விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
கோவை மாவட்டத்தில் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலைகளில் அவிநாசி சாலை முதன்மையானதாகும். தமிழகத்தின் வடக்குப் பகுதிகளில் இருந்து கோவைக்கு வர இந்தச் சாலை பிரதானமாக உள்ளது.
இந்தச் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரையில் ரூ.1,621 கோடி மதிப்பில் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டப் பணியின் தொடக்க விழா இன்று(3-ம் தேதி) நடந்தது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமை வகித்துப் பேசினார்.
வஉசி மைதானம் அருகே அவிநாசி சாலை உப்பிலிபாளையத்தில், மேற்கண்ட திட்டப்பணிக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (3-ம் தேதி) அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசும்போது," பல்வேறு மாவட்ட மக்கள் கோவையில் நுழைய முக்கியப் பாதையாக உள்ள அவிநாசி சாலையில், மாநிலத்திலேயே அதிக நீளம் கொண்ட உயர்மட்டப் பாலம் கட்டும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. விவசாயியாக இருந்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களை முதல்வர் கே.பழனிசாமி நிறைவேற்றித் தந்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அவிநாசி சாலை உயர்மட்டப் பாலத் திட்டப்பணி குறித்து அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் கே.பழனிசாமியிடம் அடிக்கடி இந்த பாலத்துக்கான திட்டப்பணி குறித்துப் பேசி, கொண்டு வந்துள்ளோம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போல், தற்போதைய முதல்வர் கே.பழனிசாமியும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று பாசிட்டிவ் எண்ணங்களைக் கொண்டவர் முதல்வர் கே.பழனிசாமி.
குறை கூறும் ஸ்டாலின்
உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாதவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அடுத்தவர் எழுதிக் கொடுத்ததை, தற்போது பேசி வருகிறார் ஸ்டாலின். முதல்வரைப் போல் களத்துக்கு வந்து பேசாமல், அறைக்குள் அமர்ந்து அவர் பேசி வருகிறார். மக்களை ஏமாற்றி, பொய் வாக்குறுதிகளையும் கூறி வருகிறார். பொய் வாக்குறுதிகளைக் கூறி கடந்த மக்களவைத் தேர்தலில் ஸ்டாலின் வாக்குப் பெற்றது போல், சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெற முயற்சிக்கிறார். மக்கள் ஸ்டாலின் பேச்சை நம்ப மாட்டார்கள். தான் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாத காரணத்தால்தான் ஸ்டாலின், அதிமுக அரசு கொண்டுவரும் எல்லாத் திட்டங்களையும் குறைகூறி வருகிறார்.
மக்களுக்காக நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். மக்களுக்குத் தேவையான திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அனைத்து இடர்ப்பாடுகளையும் எதிர்கொண்டு முதல்வர் கே.பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். கடும் மழையிலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரடியாகச் சென்று பணிகளை அவர் மேற்கொண்டார். அடுத்த முதல்வரும் கே.பழனிசாமிதான்.
அவிநாசி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மிக நீளமான இந்த உயர்மட்டப் பாலம் கட்டப்பட உள்ளது. இது பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்," என்றார்.
நிக்ழ்ச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூணன், பி.ஆர்.ஜி அருண்குமார், எட்டிமடை சண்முகம், ஒ.கே.சின்னராஜ், கஸ்தூரிவாசு, கந்தசாமி, முன்னாள் எம்.பி.யும், பாஜக நிர்வாகியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏறு, இறங்கு தளங்கள்
உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டு வின்ஸ் வரை செல்லும் வழித்தடத்தில் அண்ணாசிலை சந்திப்பு, நவஇந்தியா அருகே ஏறு தளங்களும், ஹோப்காலேஜ், விமான நிலையம் அருகே இறங்கு தளங்களும் அமைக்கப்படுகின்றன. கோல்டுவின்ஸ்ஸில் இருந்து உப்பிலிபாளையம் வரும் வழியில் விமான நிலையம், ஹோப்காலேஜ் ஆகிய இடங்களில் ஏறு தளங்களும், நவஇந்தியா, அண்ணாசிலை அருகே இறங்குதளங்குகளும் அமைக்கப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT