Published : 03 Dec 2020 03:48 PM
Last Updated : 03 Dec 2020 03:48 PM
பழநி மலைக்கோயிலில் புதிய சிலை பிரதிஷ்டை செய்ததில் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில் நீண்ட இடைவெளிக்கு பின், பழநியில் முகாமிட்டு மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலில் பழமையான நவபாஷனத்தால் ஆன சிலையை மறைத்து கடந்த 2004 ம் ஆண்டு ஜனவரி 26 ம் தேதி 220 கிலோ எடை கொண்ட புதிய சிலை நிறுவப்பட்டது.
தங்கம் உள்ளிட்ட உலோகங்களால் செய்யப்பட்ட இந்த சிலை சில மாதங்களிலேயே கருத்துவிட்டது. சிலை தயாரித்ததில் முறைகேடு நடந்துள்ளதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை தொடங்கினர். சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் சிலையை ஆய்வு செய்து அதில் கலந்துள்ள உலோகங்கள் குறித்து தெரிவித்தனர்.
சிலை செய்ததில் முறைகேடு நடந்தது தெரியவந்ததையடுத்து அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையில் நடந்த விசாரணையில் கோயில் இணைஆணையராக பணிபுரிந்த கே.கே.ராஜா, சிலையை செய்த ஸ்தபதி முத்தையா, நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன், புகழேந்தி உள்ளிட்டோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பொன்மாணிக்கவேல் பணி ஓய்வுக்கு பிறகு இந்த வழக்கு விசாரணை பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., மாதவன் தலைமையில் பழநி வந்த போலீஸார் தனியார் விடுதியில் தங்கி விசாரணையைத் தொடங்கினர். கோயிலில் பணிபுரியும் அலுவலர்கள் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து பழநியில் முகாமிட்டு சிலை முறைகேடு தொடர்பாக தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்த உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT