Published : 03 Dec 2020 03:41 PM
Last Updated : 03 Dec 2020 03:41 PM
‘வரப்போகிற சட்டப்பேரவைத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும்!’ என்று ஒரு ட்வீட்டால் தமிழகத்தின் அரசியலையே திருப்பிப் போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்.
ரஜினி, இப்போதுதான் அரசியலுக்கு வருகிறார். இப்போதுதான் அரசியல்வாதி ஆகியிருக்கிறார்; இனி அவர் அரசியல் என்ன ஆகப்போகிறது என்றெல்லாம் பேசுகிறார்கள். பேசுவது இயல்புதான்.
ஆனால் கருணாநிதி, ‘எனதருமை உடன்பிறப்புகளே!’ என்பது போல, எம்ஜிஆர், ‘என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே, தாய்க்குலமே!’ என்றது போல, ‘என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே’ என்று எப்போது இதே ரஜினி மேடையில் உச்சரித்துப் பேச ஆரம்பித்தாரோ அப்போதே அரசியலுக்கு வந்துவிட்டார் என்பதுதான் நிஜம். அநேகமாக அது 1991 வாக்கிலேயே நடந்துவிட்டது. அது ரஜினிக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
1995ஆம் ஆண்டில் 'பாட்ஷா' பட விழா. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையிலேயே, ‘தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகிவிட்டது’ என்று துணிச்சலாகப் பேசினார். அதற்கு பதிலடியாக தமிழகத்தில் பல இடங்களில் ரஜினி ரசிகர் மன்றங்கள் உடைக்கப்பட்டன. ரஜினியின் கார் தாக்கப்பட்டது. அதுதான் ரஜினியின் வெளிப்படையான அரசியல் பிரவேசம்.
அதைக் கருணாநிதி 1996-ல் தன் தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்தினார். அதே சமயம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராக இருந்த மூப்பனார் ரஜினியை நம்பியே தமாகாவை ஆரம்பித்தார் என்று பேசப்பட்டது. ஜெயலலிதா திரும்ப ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனே வந்தாலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது என்று ரஜினி பேசியபோது, ‘ரஜினிக்கு என்ன தெரியும்?’, ’அவர் வாய்ஸ் எந்த அளவு திமுகவிற்கும், தமாகாவிற்கும் பலமாக இருக்கும்?’ என்று கேலிதான் பேசினார்கள்.
ஆனால், திமுக, தமாகா கூட்டணி அப்போது பெருவாரியாக வென்று ஜெயலலிதாவையே பர்கூரில் தோற்கடித்த பின்பு, கதை வேறு மாதிரியாக ஆனது. ரஜினி வாய்ஸ் எடுபட்டுவிட்டது. ரஜினி தமாகாவிற்கு தலைமையேற்கப் போகிறார். அவரே எதிர்கால முதல்வர் ஆகப் போகிறார் என்றார்கள். அப்போதிருந்து ரஜினி எங்கே சென்றாலும்,‘வருங்கால முதல்வரே!’ என்ற பேனர்கள் தோரணம் கட்டி வரவேற்பது வாடிக்கையானது. ஆனால், ரஜினியோ அதற்குக் கதம் கதம் என்று சொல்லிவிட்டார்.
அதற்குப் பிறகு ரஜினி அரசியல் பேச்சு எடுக்கும் போதெல்லாம், ‘ரஜினி அரசியல் 1999 உடன் முடிந்துவிட்டது. அப்போதே அவர் அரசியலுக்கு வந்திருந்தால் ஜெயித்திருப்பார். எஜமான் காலடி மண்ணெடுத்து மக்கள் நெற்றியில் பொட்டு வைத்திருப்பார்கள்‘ என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் கமெண்ட் அடித்தார்கள்.
இந்தச் சூழ்நிலையில்தான் பாமக நிறுவனர் ராமதாஸ், ரஜினியின் புகை பிடிக்கும் ஸ்டைலைக் கிண்டல் செய்து அதன் மூலம் சமூகத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்தெல்லாம் பேசினார். அதில் வெகுண்ட ரசிகர்கள் ராமதாஸுக்கு எதிராக அவதூறு போஸ்டர்கள் ஒட்டினார்கள். கருப்புக்கொடி காட்டினார்கள். பாமக -ரஜினி ரசிகர்கள் இடையே கலகம் மூண்டது. அதில் பாமகவினர் ரஜினியின் ’பாபா’ படத்தை ஓடவிடாமல் ரகளை செய்த காட்சியெல்லாம் அரங்கேற்றம் கண்டது. இந்த மோதலில் ரஜினி ரசிகர்கள் சிறை சென்ற சம்பவங்களும் நடந்தன.
இதன் வெளிப்பாடாக 2004 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குப் பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்தார் ரஜினி. ‘நண்பர்கள் வீட்டில் அடைக்கலம் புகுந்துவிட்டாய்!’ என பகிரங்கமாகவே ராமதாஸுக்குக் கண்டன அறிக்கைகள் விட்டார். அப்போது திமுக கூட்டணியில் இருந்த பாமக போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் அவர்களைத் தோற்கடிக்கப் பாடுபடுமாறு ரசிகர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதிலும் ஆங்காங்கே மோதல்கள் நிகழ்ந்தன. அதில் ரஜினி வாய்ஸ் எடுபடவில்லை. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் தமிழகம்- புதுச்சேரியில் 40-க்கு 40 தொகுதிகளில் வென்றன. பாமக 6 தொகுதிகளையும் (புதுச்சேரியையும் சேர்த்து) வென்றெடுத்தது.
இந்த அலை ரஜினியைச் சும்மா விடவில்லை. அதற்குப் பிறகு நடந்த காவிரிப் போராட்டத்திலும் எதிரொலித்தது. நெய்வேலி நோக்கி நடிகர் சங்கத்தினர் நடத்திய ஊர்வலத்தில் ரஜினி கலந்துகொள்ள மறுக்க, அதை முன்னணி நடிகர்கள் அரசியலாக்கினர். அதில் ரஜினி கன்னடர் என்ற போர்வை பலமாகப் போர்த்தப்பட, காவிரிக்காகத் தனியாக உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார் ரஜினி. அதில் தமிழகத்தின் பல்வேறு தொழிலதிபர்கள், பல்வேறுபட்ட இயக்கத்தினர். நடிகர்கள் திரண்டு வந்து ஆதரவு அளித்தனர். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கான மைல் கல்லாகவே அதைக் கருதினர் அரசியல் நோக்கர்கள். பின்னர் அதுவும் நீர்த்துப்போனது.
மோடி ஆட்சிக்கு வரும் முன்பும், பின்பும் கூட பாஜக ஆதரவு நிலையிலிருந்து ரஜினி பின்வாங்கவில்லை. ஆனால் வாஜ்பாயிக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்ததுபோல் இவர்களுக்குத் தெரிவிக்கவில்லை. வீடு தேடி மோடி வருவார். ராஜ்நாத் சிங் வருவார். அமித் ஷா வருவார். சந்திப்பார். அவர்களை வழியனுப்ப ரஜினி தன் வீட்டு வாசல் வரை வருவார். மீடியாக்களுக்கு பாஜக தலைவர்களே பேட்டியளிப்பர். ரஜினியோ சிரித்தபடி மீடியாக்களின் கேள்விகளுக்கு விடையளிக்காமல் கைகூப்பிவிட்டு, வீட்டிற்குள் சென்று விடுவார்.
ஜெயலலிதாவின் மறைவு, கலைஞரின் மரணம்.. போன்றவைதான் ரஜினியை வெளிப்படையாகக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்ல வைத்தன. அதையொட்டி தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனையிலாகட்டும், மெரினா, ஜல்லிக்கட்டு போராட்டங்களிலாகட்டும் அவர் கொடுத்த பேட்டிகள் எல்லாம் சர்ச்சை கிளப்பும் விதமாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே அமைந்தன.
குறிப்பாக ரஜினியை பாஜக ஆதரவாளர் போலவும் இந்துத்துவாக்காரராகவுமே தோற்றம் கொள்ள வைத்தது. போதாக்குறைக்கு 2017-ல் போர் வரட்டும் பார்க்கலாம், 2021-ல் நம்ம ஆட்சி என்று பேசும்போது ‘ஆன்மிக அரசியல் தருவேன்!’ என்று குறிப்பிட, அவர் அரசியல் நிறம் காவிதான்; கட்சி இந்துத்துவாதான் என்றே அரசியல் நோக்கர்களைப் பேசவைத்தது.
கரோனா தொற்று ரஜினி அரசியலுக்குப் பெரும் சவால். அத்தொற்று வந்த பிறகு ரஜினி தன் உடல்நிலை குறித்துப் பேசாத விஐபிக்கள் இல்லை, அரசியல் தலைவர்கள் இல்லை, தேர்ந்த மருத்துவ நிபுணர்கள் இல்லை. ‘உங்களுக்கு அரசியல் முக்கியமா? உயிர் முக்கியமா?’ என்பதுதான் அவர்கள் கேட்ட கேள்வி. அவருக்கு நெருக்கமான பலர், ‘நீங்கள் அரசியலுக்கு வரவே கூடாது ரஜினி. உயிரோடு இருக்க வேண்டும்!’ என்று கைப்படவே எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களிடம் எல்லாம் ரஜினி சொன்ன ஒரே பதில்: ‘நான் அரசியலுக்கு வருவதாக இல்லை. உங்கள் யோசனையை மனதில் வைத்துக் கொள்கிறேன்!’ என்பதுதான்.
அதே கருத்தைத்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் இருந்தும் வரும் எதிர்பார்த்திருக்கிறார் ரஜினி. ஆனால் அவர்களோ முற்றிலும் மாறுபட்டுக் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். ‘அறிஞர் அண்ணா கேன்சர் பேஷண்ட். அந்த நிலையிலேயே அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லையா? வெற்றி பெறவில்லையா? முதல்வர் ஆகவில்லையா? எம்ஜிஆர் நினைவில்லாமல் இருக்கவில்லையா? அமெரிக்காவில் படுத்துக்கொண்டே இங்கே ஜெயிக்கவில்லையா? வி.பி.சிங் சிறுநீரகப் பிரச்சினையுடன் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லையா? போன்ற உதாரணங்கள் அவருக்குள் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியதோ தெரியவில்லை.
சரி, இனி ரஜினி அரசியலில் அடுத்தது என்ன நடக்கும்? இப்போது ரஜினி கட்சி அறிவிப்புக்கான ட்வீட் போட்டவுடனே அலை, அலையாய் ரஜினிக்கும், ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
அதில் அதிகப்படியாக இருப்பவர்கள் அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டு இருக்கும் சீனியர்களே என்கிறார்கள். ‘‘பாஜகவில் சேரவும் முடியாது. பாஜகவுடன் கூட்டணியும் கிடையாது. ஏனென்றால் தமிழ்நாட்டில் அது எடுபடாது. இங்கே நம்மில் இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். சமத்துவமே நம் மதம். அதுவே ஆன்மிக அரசியல். நம் வழி தனி வழி!’ என்று முந்தைய கூட்டத்திலேயே பேசிவிட்டார் ரஜினி. அதையே அடியொற்றி தற்போது தேர்தல் கால அரசியல் காய்கள் நகர ஆரம்பித்துள்ளன.
‘பாஜகவுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்று அறிவிக்கும் பட்சத்தில் காங்கிரஸ், புதிய தமிழகம், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட ரஜினி கட்சியுடன் கூட்டணி சேரத் தயங்காது என்பதே உண்மை. ஆனால், ரஜினி தற்போது பேட்டியளிக்கும் போது கண்களை உறுத்திய விஷயம் அவருடன் நின்ற அர்ஜூனமூர்த்தி. அவர் பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தவர்,
ரஜினியின் புதிய அரசியல் பயணத்தில் யார் யார் எந்தக் கட்சியில் இருந்து இணைவார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT