Published : 03 Dec 2020 01:05 PM
Last Updated : 03 Dec 2020 01:05 PM
டெல்லிக்குப் புறப்பட்ட தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 42 பேரை, இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்குச் சென்று போராட முடிவெடுத்து கடந்த நவ.24-ம் தேதி பி.அய்யாக்கண்ணு தலைமையில் புறப்பட்ட விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தியதுடன், அய்யாக்கண்ணுவை வீட்டுக்காவலில் வைத்தனர். இதையடுத்து அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் பாதித் தலையை மொட்டையடித்துக் கொண்டதுடன், மீசை- தாடியையும் பாதியளவு மழித்துக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து நவ.30-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பிரதமர் மோடிக்குக் கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தை ராக்கெட் போல் மடித்து ஏவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இன்று (டிச.4) மீண்டும் டெல்லி செல்ல வந்த அய்யாக்கண்ணு உட்பட விவசாயிகள் 42 பேரை, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையப் பிரதான நுழைவுவாயில் முன் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
அப்போது பி.அய்யாக்கண்ணு கூறும்போது, "டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் சேர்ந்து போராடுவதற்காக கடந்த 24-ம் தேதி புறப்படவிருந்த எங்களைக் காவல் துறையினர் தடுத்தனர். இன்றும் எங்களைப் புறப்படவிடாமல் தடுத்து விட்டனர். மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT