Published : 29 Oct 2015 09:23 AM
Last Updated : 29 Oct 2015 09:23 AM

கொடைக்கானல் பாதரசக் கழிவுகளின் பாதிப்பைச் சொல்லும் ஆவணப்படம்: ‘செவ்வகம் - மக்கள் திரை’ ஏற்பாடு

கொடைக்கானல் மலையில் புதைக் கப்பட்ட பாதரசக் கழிவுகளின் அபாயத்தை படம்பிடித்துக் காட்டும் ‘பனியில் படரும் பாதரசம்’ (Mercury in the Mist) என்கிற ஆவணப் படத்தை தென் மாவட்டங்களில் திரையிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தத் தயாராகி வருகிறது மதுரையில் உள்ள ‘செவ்வகம் - மக்கள் திரை’ அமைப்பு

0.6 கிராம் பாதரசம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவிலான ஏரியை நஞ்சாக்கி விடும். கொடைக்கானல் மலையில் செயல்பட்டு வந்த தெர்மா மீட்டர் ஆலையில் இருந்து டன் கணக்கில் பாதரசக் கழிவுகள் மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கழிவுகள், மழை நீர் வாயிலாக மஞ்சளாறு அணை மற்றும் வைகை ஆற்றில் கலப்பதால் வைகை செல்லும் பகுதிகள் அனைத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் பதறுகிறார்கள்.

இந்நிலையில் பாதரச கழிவு களின் தாக்கத்தைச் சொல்லும் ஆவணப்படத்தை மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பொது இடங்களில் திரையிடத் தயாராகி வருகிறது செவ்வகம் - மக்கள் திரை அமைப்பு.

இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசினார் அதன் ஒருங்கிணைப் பாளர் பிரபாகரன். ‘‘பேசியோ எழுதியோ ஏற்படுத்த முடியாத தாக்கத்தை ஒரு சினிமா ஏற்படுத்திவிடும். அதனால்தான் சினிமா என்ற ஆயுதத்தை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம்.

நமக்கு மட்டுமே தெரிந்த நல்ல விஷயங்களை பொது இடத்தில் காட்சிப்படுத்துதல் மூலமாக இன்னும் பத்துப் பேருக்கு தெரிய வைப்பதுதான் ‘செவ்வகம் - மக்கள் திரை’யின் நோக்கம்.

நவம்பர் முதல் தேதி மதுரை மணியம்மை பள்ளியில் ‘பனியில் படரும் பாதரசம்’ படத்தின் திரையீடும் அதுகுறித்த பொது விவாதமும் தொடங்கி வைக்கப் படுகிறது. இதன் தொடர்ச்சியாக, பாதரசக் கழிவுகளின் தாக்கத்துக்கு உள்ளாகும் என்று அஞ்சப்படும் பகுதிகள் அனைத்திலும் இப் படத்தை திரையிட முடிவு செய்திருக்கிறோம்’’ என்றார்.

‘பனியில் படரும் பாதரசம்’ ஆவணப்படத்தின் இயக்குநர் ‘மறுபக்கம்’ ஆர்.பி.அமுதன் கூறும் போது, ‘‘சுமார் 290 டன் அளவுக்கு கொடைக்கானல் மலையில் பாதரசக் கழிவுகள் புதைக்கப்பட்டுள் ளன. இதனால் கடந்த பத்து ஆண்டுகளில் விநோதமான நோய்களால் பாதிக்கப்பட்டு சுமார் 30 பேர் இறந்திருக்கிறார்கள். நிறையப் பேருக்கு நினைவு தப்பிவிட்டது. இந்த நிலையில், மண்ணில் புதைக்கப்பட்ட பாதரசக் கழிவுகள் மழை நீர் வழியாக கொடைக்கானல் மழை முழுவதும் பரவி இப்போது சம வெளிப் பகுதிக்கும் வந்துவிட்டது. இந்த விவகாரம் ராமநாதபுரம் வரைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மக்கள் இன்னும் உணரவில்லை. அதனால்தான் இது உள்ளூர் போராட்டமாக சுருங்கிவிட்டது’’ என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x