Published : 02 Dec 2020 06:17 PM
Last Updated : 02 Dec 2020 06:17 PM
தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி அரசின் பெரும்பான்மைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்ததால்தான் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்களுக்கு எதிராக உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக் கூறி அதை ரத்து செய்தது.
இதையடுத்து, மீண்டும் கூடிய உரிமைக்குழு, இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதி விதித்த தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு இன்று (டிச. 02) விசாரணைக்கு வந்தது.
அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், என்.ஆர்.இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி ஆகியோர், "குட்கா பொருட்களைத் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லவோதான் தடை செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாரும் குட்கா பொருட்களை உட்கொள்ளவில்லை. பேச்சுரிமை அடிப்படையில், குட்கா பொருட்கள் விற்கப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டத்தான் பேரவைக்கு குட்கா கொண்டு சென்றனர்.
நாடாளுமன்றம் எது உரிமை, உரிமை மீறல் என்பதை வரையறை செய்யவில்லை. முதல்வரை மாற்றக்கோரி 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர். இப்படித் தொடர்ச்சியாக அரசின் பெரும்பான்மைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்ததால்தான் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்களுக்கு எதிராக உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது" என வாதிட்டனர்.
சட்டப்பேரவைச் செயலாளர் சார்பில் ஆஜரான அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, "உரிமைக்குழு தனது முடிவை பேரவையில் சமர்ப்பிக்கும். பேரவைதான் இதில் முடிவெடுக்கும். ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் மட்டும் குட்கா பொருளைக் கொண்டு வரவில்லை. எல்லோரும் கொண்டு வந்தனர். ஒரு சட்டப்பேரவை உறுப்பினர், சட்டத்தால் தடை செய்யப்பட்ட எதையும் அவைக்குக் கொண்டு வரக்கூடாது. அதனால் குட்காவைப் பேச்சுரிமைக்காகத்தான் கொண்டுவந்தோம் எனக் கூறக்கூடாது.
உரிமைக்குழு முன்பு விளக்கமளிக்க வாய்ப்புள்ள நிலையில், தற்போது நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டிய அவசியமில்லை. தங்கள் தரப்பு அனைத்து வாதங்களையும் உரிமைக்குழு முன்பு சமர்ப்பிக்க உரிமையும், வாய்ப்பும் உள்ளது.
அடிப்படை உரிமை, பேச்சுரிமை நிபந்தனைக்கு உட்பட்டது. அவைக்கு என்று ஒரு மரபு உள்ளது. எல்லோரும் பேரவையில் இஷ்டம் போல் செயல்பட முடியாது. அவர்கள் முன் அனுமதி பெறாமல் குட்கா பொருட்களைக் கொண்டு வந்துள்ளனர்.
இந்த அரசுக்கு ஒருபோதும் பெரும்பான்மைக்குக் குறைவு ஏற்பட்டதில்லை. எனவே, அவையில் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ளத்தான் உரிமை மீறல் பிரச்சினை கையில் எடுக்கப்பட்டது எனக் கூறுவதில் அர்த்தமில்லை.
அவையின் செயல்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் எது வேண்டுமானாலும் உரிமை மீறல் எனக் கருதலாம். சட்டப்பேரவை நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது" என வாதிட்டார்.
தொடர்ந்து, சட்டப்பேரவைச் செயலாளர் சார்பில் ஆஜராகி வரும் சோமையாஜியின் வாதம் நிறைவடையாததால் வழக்கின் விசாரணை நாளை (டிச. 03) பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT