Published : 02 Dec 2020 04:40 PM
Last Updated : 02 Dec 2020 04:40 PM

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது

கர்ணன்: கோப்புப்படம்

சென்னை

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்களை வெளியிட்ட வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு எதிராகவும், அவதூறு வீடியோக்களை ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா முன்பு நேற்று முன்தினம் (நவ. 30) விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதில், கர்ணனை நேரடியாக விசாரணைக்கு அழைத்து, விசாரணை நடத்தப்பட்டதாகவும் இனிமேல் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட மாட்டேன் என்று அவர் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தனர். இது குறித்து, தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் டிசம்பர் 7-ம் தேதி நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், சென்னையை அடுத்த ஆவடி அருகே அவருடைய வீட்டில் வைத்து கர்ணனை இன்று (டிச. 02) மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீது கலவரத்தைத் தூண்டும் விதத்தில் பேசுதல், பெண்களை அவமதித்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, 2017-ம் ஆண்டு, மேற்கு வங்க உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக கர்ணன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x