Last Updated : 02 Dec, 2020 02:07 PM

 

Published : 02 Dec 2020 02:07 PM
Last Updated : 02 Dec 2020 02:07 PM

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம்; முதலாம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் கண்ணீர் அஞ்சலி

மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு அஞ்சலி செலுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினர்.

கோவை

கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து, 17 பேர் உயிரிழந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த நடூரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி அதிகாலை, சிவசுப்பிரமணியம் என்பவரின் வீட்டின் 20 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவர் பலத்த மழையின் காரணமாக இடிந்து, அருகிலிருந்த குடியிருப்புகளின் மீது விழுந்தது. இதில், அந்த குடியிருப்புகளில் வசித்து வந்த 17 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.2) அனுசரிக்கப்பட்டது.

முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள், குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் ஆகியோர் விபத்து நடந்த இடத்தில் இன்று திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். விபத்து நடந்த இடத்தில் மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை, ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலை, வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஆனால், கூறியபடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை.

உயிரிழந்த 17 பேரில், 11 பேரின் குடும்பத்துக்கு மட்டுமே நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும், கூறியபடி அனைவருக்கும் அரசு வேலை ஒதுக்கீடு செய்ய வேண்டும், வீடுகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளின் சார்பில் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர், மீண்டும் மேற்கண்ட பகுதியில் சுற்றுச்சுவரைக் கட்டினார். இதற்கும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே, முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதால் மேற்கண்ட பகுதியில், தடையை மீறி அஞ்சலி, ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற நிகழ்வுகளில் பல்வேறு அமைப்பினர் ஈடுபடுவதைத் தடுக்க, போலீஸார் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். விபத்துச் சம்பவம் நடந்த பகுதியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மட்டும் சென்று அஞ்சலி செலுத்த போலீஸார் அனுமதித்துள்ளனர். அமைப்பினர், அரசியல் கட்சியினர் அந்தப் பகுதியில் சென்று அஞ்சலி செலுத்த போலீஸார் தடை விதித்துள்ளனர்.

அந்த இடத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்னதாக, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே இடம் ஒதுக்கி, அமைப்பினர் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும் போலீஸார் அனுமதித்துள்ளனர். ஆர்ப்பாட்டம் செய்தவுடன் அவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.

சமூக நீதிக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சி, திராவிடப் பண்பாட்டு கூட்டியிக்கத்தினர் உள்ளிட்டோர் மேற்கண்ட ஒதுக்கப்பட்ட இடத்தில், இன்று திரண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும், மீண்டும் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

550 போலீஸார் குவிப்பு

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு கூறும்போது, "மேட்டுப்பாளையம் நடூரில் முன்னெச்சரிக்கை பாதுகாப்புக்காக எனது தலைமையில் 550 போலீஸார் கண்காணிப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக, ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" என்றார்.

மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறும்போது, "மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இதுவரை 11 பேருக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ளவர்களின் வாரிசுதாரர்களைக் கண்டறியும் பணி நடக்கிறது. இந்த 17 பேரில் 4 பேரின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் அனைத்து வீடுகளும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே, அங்கு உயிரிழந்தவர்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்குமே, மாற்று இடத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. குடிசை மாற்று வாரியத்தின் மூலம் இடம் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்குள் பணி முடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x