அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும்: வைகோ
அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (டிச.2) வெளியிட்ட அறிக்கை:
"மருத்துவத் துறையில், இந்தியாவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற்று இருக்கின்றது. உலகின் பல நாடுகளில் இருந்து மருத்துவத்திற்காகத் தமிழகத்தை நாடி வரக்கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கின்றது.
தமிழ்நாட்டில் 40 ஆயிரம் அரசு மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில், 18 ஆயிரம் மருத்துவர்களே உள்ளனர். எனவே, வழக்கமான காலத்திலேயே அவர்களுக்குக் கடுமையான பணி நெருக்கடிகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த எட்டு மாதங்களாக, கரோனா பெருந்தொற்று நோயை எதிர்கொண்டு போராடுவதில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, அரசு மருத்துவர்கள் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, இரவு பகலாகப் பணி ஆற்றி வருகின்றனர். தலைமை நீதிபதி கூட, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்ந்து நலம் பெற்று இருக்கின்றார். ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்குப் பாதுகாப்பாக, அரசு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.
ஆனால், இந்தியா முழுமையும் அரசு மருத்துவர்கள் பெறுகின்ற ஊதியத்தை ஒப்பிடுகையில், மருத்துவத் துறையில், இந்தியாவில் 25ஆவது இடத்தில் இருக்கின்ற பிஹார் மாநில அரசின் மருத்துவர்கள் பெறுகின்ற ஊதியத்தை விட, தமிழக அரசு அரசு மருத்துவர்கள் குறைந்த ஊதியத்தையே பெற்று வருகின்றார்கள் என்பது, அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது.
மத்திய அரசு மருத்துவர்கள், 4 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை, மாநில அரசு மருத்துவர்கள் 15 ஆண்டுகள் கழித்துத்தான் பெறுகின்றார்கள்; அவர்கள் 9 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை 17 ஆண்டுகள் கழித்தும், 13 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை, 20 ஆண்டுகள் கழித்தும் பெறுகின்றார்கள். இதன் விளைவாக, மத்திய அரசு மருத்துவர்கள், 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் பெறுகின்றபோது, மாநில அரசு மருத்துவர்கள் 86 ஆயிரம் ரூபாய் மட்டுமே பெறுகின்றார்கள்.
எனவே, 14ஆவது ஆண்டு முதல், பணி ஓய்வு பெறுகின்ற வரையிலும், மத்திய அரசு மருத்துவர்களை விட மாதந்தோறும் 45 ஆயிரம் ரூபாய் குறைவான ஊதியத்தையே பெறுகின்றார்கள்.
23.10.2009 ஆம் நாளிட்ட அரசு ஆணை 354இன்படி, தற்போது உள்ள 8, 15, 17, 20 ஆண்டுகள் முடிந்து கொடுக்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வை, 5, 9, 11, 12 ஆண்டுகள் முடிந்தவுடன் தருமாறு மருத்துவர்கள் கோரி வருகின்றனர். குறிப்பாக, 20 ஆண்டுகள் முடிந்து கொடுக்கப்படும் உயர்வை, 13ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் தருமாறு கேட்டு வருகின்றனர். அதன்படி, 2017 ஆம் ஆண்டு முதல், தங்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் வழங்கக் கோரி, தமிழக அரசு மருத்துவர்கள் பல போராட்டங்களை நடத்தி இருக்கின்றார்கள்.
அவர்களுடைய போராட்டத்தில் நானும் பங்கேற்று ஆதரித்து உரை ஆற்றி இருக்கின்றேன்.
எனவே, 2018 ஆம் ஆண்டு, ஊதிய உயர்வு குறித்து ஆய்வு செய்யத் துறை சார்ந்த குழு அமைக்கப்பட்டது. மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என, அக்குழு பரிந்துரை அளித்தது. அக்குழுவின் பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு, விரைந்து முடிவு எடுக்குமாறு, அதே ஆண்டு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்தது.
ஓராண்டு கழிந்தும், அரசு அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், 2 பெண் மருத்துவர்கள் உட்பட ஐந்து மருத்துவர்கள் சாகும் வரை உணவை மறுத்துப் போராட்டம் நடத்தினர். ஆயினும், மருத்துவர்கள் தங்கள் பணிகளைத் தடையின்றித் தொடர்ந்து செய்து வந்தனர். 31.10.2019 அன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்த வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை நிறுத்தினர். ஆனால், அதன் பிறகு, 118 அரசு மருத்துவர்கள், நீண்ட தொலைவுக்குப் பணி இட மாற்றம் செய்யப்பட்டனர். 2020 பிப்ரவரி 28ஆம் நாள், மருத்துவர்கள் பணி இட மாற்றத்தை, சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. ஆயினும், இன்னமும் சில மருத்துவர்களின் பணி நீக்கம் விலக்கிக் கொள்ளப்படவில்லை.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், மருத்துவர்களின் கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என, மதிமுகவின் சார்பில் வலியுறுத்துகின்றேன்".
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
