Published : 01 Dec 2020 08:59 PM
Last Updated : 01 Dec 2020 08:59 PM
குஜராத் மாநில பாஜக மாநிலங்களவை உறுப்பினரும், பிரபல கிரிமினல் வழக்கறிஞருமான அபய் பரத்வாஜ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சென்னையில் உயிரிழந்தார்.
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் அபய் பரத்வாஜ், கடந்த ஜூலை மாதத்தில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் அவர் ராஜ்கோட்டில் ஒரு பேரணியில் பங்கேற்றார். அதன் பின்னர் அவருக்குக் கடந்த செப்டம்பர் மாதம் கரோனா தொற்று பாதித்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். செப்டம்பர் 15-ம் தேதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வென்டிலேட்டர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் ராஜ்கோட் மருத்துவமனையின் ஐசியூ வார்டில் ஒரு மாதம் அபய் பரத்வாஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை, சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பரத்வாஜுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.
இதுகுறித்து எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பு:
“குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய் பரத்வாஜ் கோவிட் தொற்று, கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த அக்டோபர் 9-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது நுரையீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவரது உள் உறுப்புகள் அதிக அளவில் சேதமடைந்ததால் இன்று மாலையில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்”.
இவ்வாறு எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடந்த ஒரே வாரத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் கடந்த நவம்பர் 26ஆம் தேதி அன்று கரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
அபய் பரத்வாஜ் மரணத்திற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் பதிவு:
“குஜராத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. ஸ்ரீ அபய் பரத்வாஜ் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தார். மேலும் சமூகத்திற்குச் சேவை செய்வதில் முன்னணியில் இருந்தார். தேசிய வளர்ச்சியில் ஆர்வமுள்ள, பிரகாசமான மற்றும் புத்திசாலித்தனமான ஒருவரை நாம் இழந்திருப்பது வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி”.
Rajya Sabha MP from Gujarat, Shri Abhay Bharadwaj Ji was a distinguished lawyer and remained at the forefront of serving society. It is sad we have lost a bright and insightful mind, passionate about national development. Condolences to his family and friends. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) December 1, 2020
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT