Published : 01 Dec 2020 07:31 PM
Last Updated : 01 Dec 2020 07:31 PM
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நிவர் புயலின்போது சாய்ந்த பழமையான மரங்களை மீண்டும் அதே இடத்தில் நடும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன.
இந்தியாவில் இருக்கும் தலைசிறந்த பூங்காக்களில் ஒன்று புதுச்சேரி தாவரவியல் பூங்கா. 1826-ம் ஆண்டு தலைசிறந்த தாவரவியலாளர் பெரோட்டேட் மூலம் பல அரிய மற்றும் முக்கியத் தாவரங்கள் பல நாடுகளில் இருந்து தாவரவியல் பூங்காவில் கொண்டு வரப்பட்டு நடப்பட்டன. இங்கு இருக்கும் பெரும்பாலான மரங்களுக்கு பெயர்ப்பலகை உண்டு. கடந்த 2011-ல் தானே புயலில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் இங்கு வேரோடு சாய்ந்தன. அதையடுத்து மீண்டும் சீரமைக்கப்பட்டன.
இந்நிலையில் நிவர் புயல் அண்மையில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்ததால் சாலையோரம் இருந்த பல மரங்கள் நகரில் சாய்ந்தன. அவை பல்வேறு துறையினரால் அகற்றப்பட்டன. இதற்கிடையே புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் இருந்து பழமையான 9 மரங்கள் நிவர் புயலால் சரிந்தன. மரத்தின் கிளைகளைக் கழித்துவிட்டு, பெரிய மரத்தின் வேர் அடிப்பகுதியை மீண்டும் அதே இடத்தில் நட்டு வளர்க்க வேளாண் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக இன்று பெரிய கிரேன், பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன.
முதலில் நூற்றாண்டு கடந்த பழமையான மகிழம் மரத்தை அதே இடத்தில் நடும் பணி தொடங்கியது. அதேபோல் மேலும் சில மரங்களும் அதற்கான இடத்தில் குழிதோண்டி நடப்பட்டன.
இதுகுறித்து வேளாண்துறை இயக்குநர் பாலகாந்தி கூறுகையில், "சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மூன்று முக்கிய மரங்களை மீட்டெடுக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. முற்றிலுமாக விழுந்த ஒரு மரம் மற்றும் பகுதியாகச் சரிந்த இரு மரங்களை மீட்டெடுக்கும் பணி தற்போது நடந்தது. இதில் 194 ஆண்டுகள் பழமையான மகிழம்பூ மரத்தை மீட்டெடுக்கும் பணி நடந்தது. இது மருத்துவ மதிப்புள்ள மரமாகும்.
கிளைகளைக் கத்தரித்து இரண்டு கிரேன்களைப் பயன்படுத்தி ஜேசிபி இயந்திரம் மூலம் விஞ்ஞான முறையில் மீண்டும் நடுகிறோம். இப்பணியில் திறன் வாய்ந்த 15 பேர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் 130 ஆண்டுகள் பழமையான மகாகோனி மரம், பத்து வயதான பெருங்கொன்றை மரம் ஆகியவற்றையும் இதைத் தொடர்ந்து மீட்டெடுக்க உள்ளோம். வனத்துறை உதவியுடன் இப்பணி நிறைவடையும்" என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT