Published : 08 Oct 2015 03:40 PM
Last Updated : 08 Oct 2015 03:40 PM
இந்தியாவின் தட்பவெப்பநிலை தனது நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப இல்லாததால் பெரும் அவதிப்பட்ட ஆங்கிலேயர்கள் மாற்று வழியாக கண்டுபிடித்ததுதான் நீலகிரி. இங்கு கோடை காலத்தில் இளைப்பாற வெள்ளைகாரர்கள் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் செல்ல வசதியாக 1894-ம் ஆண்டு நீலகிரி மலையையும் சமதளப் பகுதியான கோவை மேட்டுப்பாளையம் பகுதியையும் பிரிக்கும் கல்லாறு எனும் காட்டாற்றின் மீது தொங்குப் பாலம் ஒன்றை அமைத்தனர். இதற்கான கல்வெட்டும் உள்ளது.
கல்லாற்றின் இரு கரையிலும் சுமார் 100 அடி உயரத்துக்கு சுட்ட செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையை பயன்படுத்தி மிக வலிமையான தூண்கள் அமைத்து, இதில் இரும்புக் கம்பிகள் மூலம் மரப் பலகைகளை இணைத்து 200 அடி தொலைவுக்கு தொங்கு பாலம் கட்டினர். இதில் பயணிக்கும்போது இப் பாலம் ஊஞ்சல் போல் ஆடும். எனவே தூரிப் பாலம் என்றே உள்ளூர் மக்கள் இதனை அழைத்தனர். குதிரை வண்டிகளுக்குப் பதிலாக கார்கள் வந்த பிறகு தூரிப் பாலத்தில் பயணிக்க முடியாது என்பதால் இந்த பாலத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவிலேயே 1925-ம் ஆண்டு இரும்பால் ஆன ஒரு பாலத்தை அடியில் எவ்வித தூண்களும் இல்லாமல் கட்டினர்.
இதன் மீது வாகனங்கள் சென்றால் இதன் எடை கீழ் நோக்கிச் செல்லாமல் மேல் நோக்கிச் செல்லும் வகையில் புதுவித தொழில்நுட்பத்துடன் கட்டினர். உதகை , குன்னூர் உள்ளிட்ட பகுதிகள் வளர்ச்சியடைய இந்த தூரிப் பாலமே முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்த பாலம் இரும்பாலானது என்றாலும் பக்கத்தில் உள்ள ஆடும் தூரிப் பாலத்துக்கு பதிலாக கட்டப்பட்டதால் இதனையும் தூரிப் பாலம் என்றே மக்கள் குறிப்பிட்டு வந்தனர். இரண்டாவதாக ஒரு பாலம் கட்டப்பட்ட பழைய பாலம் புராதனச் சின்னம் போன்று அப்படியே இருந்து வந்தது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள 11 முக்கிய யானைகள் வழித்தடத்தில் இந்த தூரிப் பாலத்துக்கு அருகே இருக்கும் கல்லார் பகுதியும் ஒன்று என கண்டறியப்பட்டது. இங்கு ஓடும் காட்டாற்றில் யானைகள் கூட்டம் கூட்டமாக நீர் அருந்த வருவதாலும் இப் பகுதி போக்குவரத்து, இவற்றின் இயற்கையான இயல்பு வாழ்கையை பாதிப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்தது. கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு யானைகள் இடம் மாற கல்லாறு காட்டைக் கடந்தாக வேண்டும்.
இந்த நிலையில் தற்போது கல்லாறில் இருந்து உதகை செல்லும் பாதையின் இரண்டாம் வளைவு வரை வாகனப் போக்குவரத்துக்காக நீண்ட உயர்மட்டப் பாலம் அமைத்து தரைப் பகுதியை பழையபடி விலங்குகளுக்கான வனமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதன் ஆரம்ப கட்டப் பணியாக வனத்துறையின் பரிந்துரைப்படி தேசிய நெடுஞ்சாலை துறையினர் பழைய பயன்பாட்டில் இல்லாமல் ஒரு வரலாற்றுச் சின்னமாக மட்டுமே நின்று கொண்டிருந்த தூரிப் பாலத்தை நேற்று முதல் இடிக்கத் தொடங்கியுள்ளனர். 120 ஆண்டுகளை கடந்தும் இன்று வரை நீலகிரி மாவட்டத்தின் வளர்ச் சிக்கு அடித்தளமிட்ட ஒரு பாலம் தகர்ப்பதை உள்ளுர் மக்களுக்கும், பழமையை ரசிப்பவர்களும் ஒருவித ஏக்கம் கலந்த வருத்தத்துடனே பார்த்து வருகின்றனர். இது யானைகளுக்கும், இயற்கையை ரசிக்கவும் அகற்றப்படுகிறது என்பதை உணர்ந்து அவர்கள் ஆறுதல் கொள்வதையும் காணமுடிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT