Published : 01 Dec 2020 05:28 PM
Last Updated : 01 Dec 2020 05:28 PM

தேர்வுகள் நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகள் வெளியிட இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக, தேர்வுகள் நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகள் வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால், இறுதிப் பருவத் தேர்வு தவிர பிற தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதேபோல, அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளுக்குப் பதிலளித்த பல்கலைக்கழக மானியக்குழுவும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலும், அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்திருந்தது.

அரியர் தேர்வுகளை ரத்து செய்யப் பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும், மாணவர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், சில பல்கலைக்கழகங்கள் தேர்வுகள் நடத்தாமல், அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருவதாகக் கூறி, அதற்குத் தடை விதிக்க வேண்டும் என ராம்குமார் ஆதித்தன் சார்பில் புதிய மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் இன்று (டிச.1) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக, தேர்வு நடத்தாமல் எப்படி முடிவுகளை வெளியிடலாம் எனக் கேள்வி எழுப்பினர்.

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டனர்.

ஆன்லைன் மூலமாகவோ, ஆஃப்லைன் மூலமாகவோ பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்தாமல், முடிவுகள் வெளியிடத் தடை விதித்த நீதிபதிகள், அரியர் தேர்வுகளையும் ரத்து செய்யும்படி பல்கலைக்கழகங்களை அரசாணை மூலம் எப்படிக் கட்டாயப்படுத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பினர்.

கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த நீதிபதிகள், 30 சதவீத மக்கள் மட்டுமே முகக்கவசம் அணிவதாகத் தலைமைச் செயலாளர் கூறியுள்ள நிலையில், மக்களைப் பாதுகாப்பதற்காகத் தேர்வுகளை ரத்து செய்வதாக எப்படிக் கூறமுடியும் எனவும் கேள்வி எழுப்பினர்.

அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்குகளின் விசாரணையின்போது, மாணவர்கள் காணொலிக் காட்சி விசாரணையில் நுழைந்து, இடையூறு ஏற்படுத்தியதையும், நீதிமன்ற விசாரணையை யூடியூபில் ஒளிபரப்பியதற்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

இதனால் இந்த அனைத்து வழக்குகளின் விசாரணையும் நேரடி விசாரணையாக நடத்தப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 11-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x