Published : 01 Dec 2020 03:57 PM
Last Updated : 01 Dec 2020 03:57 PM

பாமகவின் போராட்டம் தேர்தலுக்கான நாடகம்: கனிமொழி விமர்சனம்

ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபடும் கனிமொழி

ஈரோடு

பாமகவின் போராட்டம் தேர்தலுக்கான நாடகமாக கருதுவதாக, திமுக மகளிர் அணி செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பிரச்சார பயணத்தை ஈரோட்டில் இன்று (டிச. 01) 2-வது நாளாக தொடங்கிய திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கட்சி நிர்வாகிகளை சந்தித்தும், கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின்னர் பெரியார் - அண்ணா நினைவகத்தை பார்வையிட்ட கனிமொழி அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, "அதிமுக ஆட்சி பெரியாரின் கொள்கைக்கு எதிரான ஆட்சி. இந்த ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். வருகிற தேர்தலில் ஸ்டாலின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஜனி அரசியலுக்கு வந்தால் அதுகுறித்து கருத்து தெரிவிக்கிறேன்.

பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டம் தேர்தலுக்கான நாடகம் என கருதுகிறேன்.

சமூகநீதிக்காக பாஜக எதுவும் செய்யவில்லை. சமூக நீதிக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. திமுகவை குறை கூற பாஜகவுக்கு அருகதையில்லை.

மு.க.அழகிரி தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், அரசியலில் ஈடுபடலாம், அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

திராவிடத்தை யாரும் வீழ்த்த முடியாது, சுயமரியாதை உணர்வை யாரும் வீழ்த்திட முடியாது. இது பெரியார் மண். அதிமுக சுயமரியாதையை இழந்துள்ளது" என கனிமொழி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x